லண்டன்-பிரான்ஸ் நாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி ரூ.92 லட்சம் மோசடி: பெண் உட்பட 3 பேர் கைது
- சேகர் கொடுத்த புகாரின் பேரில் புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
- 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள நாட்டார்மங்கலத்தை சேர்ந்தவர் சேகர். இவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும் ஆர்வத்தில் இருந்தார். அதற்கான முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார்.
அப்போது அவருக்கு கே.புதுப்பட்டி அருகேயுள்ள போசம்பட்டி பகுதியை சேர்ந்த சந்தோஷ் ராஜா (வயது 35) என்பவர் அறிமுகமாகி உள்ளார். அவர் சேகரிடம் லண்டன் அல்லது பிரான்ஸ் நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். அதற்காக உடனடியாக ரூ.15 லட்சம் பணத்தையும் வாங்கியுள்ளார்.
ஆனால் காலம் கடந்த பின்னரும் அவரை லண்டன் நாட்டிற்கு அனுப்பாமல் கிர்கிஸ்தான் நாட்டிற்கு அனுப்பியுள்ளார். இவரை போலவே சீனிவாசன், சுப்பையா மற்றும் சிலரிடம் சுமார் ரூ.92 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு சரியான வேலையை வாங்கி தராமல் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் சந்தோஷ் ராஜாவிற்கு துணையாக கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியைச் சேர்ந்த ஆதில்வினோ என்பவரது மனைவி நிவேதா (26), கேரளாவை சேர்ந்த ஜோஸ்வா நிதின், மதுரை கோச்சடை பகுதியைச் சேர்ந்த ராஜ்கமல் மற்றும் சிலர் உதவியுள்ளனர். சேகர் கொடுத்த புகாரின் பேரில் புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் மோசடியில் ஈடுபட்ட சந்தோஷ்ராஜா, மதுரையை சேர்ந்த ராஜ்கமல், கன்னியாகுமரியை சேர்ந்த நிவேதா ஆகியோரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.