சங்ககிரியில் லாரி மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்வு
- விபத்துக்கு காரணமான லாரி டிரைவரான ஆந்திராவை சேர்ந்த ஜெகன்பாபு மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து ஏற்கனவே கைது செய்யப்பட்டார்.
- நெடுஞ்சாலையில் நிறுத்தும் வாகனங்களை கண்காணித்து போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள்.
சேலம்:
சேலம் கொண்டலாம்பட்டி காமராஜர் காலனி மேட்டு தெருவில் வசித்து வருபவர் ராஜதுரை (வயது 28). இவர் சேலம் மாநகராட்சியில் குப்பை அள்ளும் வாகனத்தில் தற்காலிக டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகா ஈங்கூர் குட்டப்பாளையத்தை சேர்ந்த பழனிசாமி மகள் பிரியாவுக்கும் (25) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு சஞ்சனா என்ற ஒரு வயது பெண் குழந்தை இருந்தது.
குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த 6-ந்தேதி மருமகனையும், மகளையும் சமாதானம் செய்து வைக்க அன்று இரவு ஈங்கூர் குட்டப்பாளையத்தில் இருந்து பிரியாவின் தந்தை பழனிசாமி (50), தாயார் பாப்பாத்தி(45), தாய்மாமா ஆறுமுகம் (49), அவருடைய மனைவி மஞ்சுளா (38), தாய்மாமன் மகன் விக்னேஷ் (20), மற்றொரு மாமன் செல்வராஜ் (55) ஆகியோருடன் ஆம்னி காரில் சேலத்துக்கு வந்து இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர்.
அப்போது பிரியா ஒரு வாரம் தனது பெற்றோர் வீட்டில் இருந்து விட்டு வருவதாக கூறி உள்ளார். இதையடுத்து தனது குழந்தையுடன் பிரியா ஆம்னி வேனில் புறப்பட்டார். ஆம்னி வேனை விக்னேஷ் (20) என்பவர் ஓட்டினார். வேன் 6-ந் தேதி அதிகாலை 2.30 மணியளவில் சங்ககிரி அருகே உள்ள சின்னாகவுண்டனூர் பைபாஸில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் அதி பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் பழனிசாமி, பாப்பாத்தி, ஆறுமுகம், மஞ்சுளா, செல்வராஜ், குழந்தை சஞ்சனா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். பிரியா, டிரைவர் விக்னேஷ் ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இருவரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது . இதில் விக்னேஷ் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 5.30 மணியளவில் பரிதாபமாக இறந்தார். இதனால் இந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. பிரியாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்துக்கு காரணமான லாரி டிரைவரான ஆந்திராவை சேர்ந்த ஜெகன்பாபு (25) மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து ஏற்கனவே கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அந்த பகுதியில் நெடுஞ்சாலையில் நிறுத்தும் வாகனங்களை கண்காணித்து போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள்.