மருத்துவ மாணவி தற்கொலையை சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த வேண்டும்: சரத்குமார் வலியுறுத்தல்
- மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்களின் மீது காவல்துறை பிரிவு 306-ன் கீழ் மட்டுமே வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.
- பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்கான வழக்கு எண் சேர்க்கப்படவில்லை என அறிகிறேன்.
சென்னை :
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவ கல்லூரியில் முதுநிலை இரண்டாம் ஆண்டு பயின்று வந்த மாணவி சுஜிர்தா (வயது 27) பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை தருவதாக எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த மனவேதனை அளிக்கிறது.
மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்களின் மீது காவல்துறை பிரிவு 306-ன் கீழ் மட்டுமே வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்கான வழக்கு எண் சேர்க்கப்படவில்லை என அறிகிறேன். காவல்துறை அதிகாரிகள் உடனடியாக மாணவியின் தற்கொலைக்கு காரணமாக இருந்தவர்களை கைது செய்து விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரவும், இனிமேல் இதுபோன்று எந்தவொரு மாணவிக்கும் துயரம் ஏற்படாத வகையில், நேர்மையான முறையில் விசாரணை நடப்பதற்கு, இவ்வழக்கினை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிட்டு, உரிய நீதி பெற்றுத்தர வேண்டுமென தமிழக அரசிடம் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், கல்லூரிக்கு படிக்கச் சென்ற மகளை இழந்து தீராத வேதனையில் வாடும், முதுநிலை மருத்துவ கல்லூரி மாணவியின் பெற்றோருக்கும், நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.