ஈரோடு கிழக்கு தொகுதிக்கு 6 மாதத்தில் இடைத்தேர்தல்- தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
- 1500 வாக்காளர்களுக்கு 1 வாக்கு சாவடி என்ற வகையில் இப்போது உள்ளது. கொரோனாவின் போது இந்த எண்ணிக்கையை இரண்டாக பிரித்தோம்.
- இப்போது 1500 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற அளவில் உள்ளது.
சென்னை :
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
கேள்வி: வாக்காளர் பட்டியலில் இனிமேலும் பெயர் சேர்க்க முடியுமா?
பதில்: தாராளமாக பெயர் சேர்க்கலாம். 17 வயது பூர்த்தியானவர்களும் விண்ணப்பம் வாங்கி பூர்த்தி செய்து கொடுக்கலாம். 18 வயது ஆனதும் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டு விடும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஒரு வருடத்தில் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் ஆகிய 4 மாதங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க பணிகள் நடைபெறும்.
கேள்வி: வாக்காளர் பட்டியல் தொடர்பான விவரங்களை கேட்டு பெற முடியுமா?
பதில்: 100 ரூபாய் செலுத்தினால் பி.டி.எப். வடிவத்தில் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் அதில் போட்டோ இருக்காது.
கேள்வி: வெளிநாடுகளில் வசிப்பவர்கள் அங்கிருந்த படியே தமிழ்நாட்டில் நடைபெறும் தேர்தலில் வாக்களிக்க முடியுமா?
பதில்: வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கும் பட்சத்தில் இங்கு வந்து தான் ஓட்டு போட வேண்டும்.
கேள்வி: புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடையாள அட்டை எப்போது கிடைக்கும்?
பதில்: 1 மாதத்தில் வீடுகளுக்கு வாக்காளர் அடையாள அட்டை அனுப்பி வைக்கப்படும்.
கேள்வி: தமிழகத்தில் வாக்குசாவடிகள் அதிகரிக்கப்படுமா?
பதில்: 1500 வாக்காளர்களுக்கு 1 வாக்கு சாவடி என்ற வகையில் இப்போது உள்ளது. கொரோனாவின் போது இந்த எண்ணிக்கையை இரண்டாக பிரித்தோம். ஆனால் இப்போது 1500 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற அளவில் உள்ளது.
கேள்வி: ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக புலம்பெயர்ந்த வாக்காளர்கள் ரிமோட் மூலம் வாக்களிப்பதற்கான ஆலோசனை கூட்டத்துக்கு அ.தி.முக.வுக்கு எத்தனை கடிதம் அனுப்பினீர்கள்?
பதில்: முதலில் ஆள் மூலம் கொடுத்து அனுப்பினோம். அதை வாங்க மறுத்ததால் ஸ்பீடு தபாலில் அனுப்பி வைத்தோம். அவர்கள் அதை திருப்பி அனுப்பிய தகவலை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்து விட்டோம்.
கேள்வி: அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு தபால் வந்தால் தான் பெற்றுக்கொள்வோம் என்று சொல்கிறார்களே. எனவே அந்த பதவியை குறிப்பிட்டு மீண்டும் தபால் அனுப்பப்படுமா? இந்திய தேர்தல் கமிஷன் இதுபற்றி ஏதும் கூறி இருக்கிறதா?
பதில்: டெல்லியில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
கேள்வி: ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மரணம் அடைந்து விட்டார்.
இதுகுறித்து தலைமை தேர்தல் கமிஷனுக்கு தகவல் தெரிவித்து விட்டீர்களா? அங்கு எப்போது இடைத்தேர்தல் நடைபெறும்?
பதில்: 1 தொகுதி காலி இடமாக அறிவிக்கப்பட்டால் அங்கு 6 மாத காலத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தேர்தல் கமிஷனின் விதியாகும். அந்த அடிப்படையில் ஈரோடு தொகுதி எம்.எல்.ஏ. மரணம் அடைந்துள்ளதால் இதுபற்றி தமிழக சட்டபேரவை செயலகத்தில் இருந்து இன்று எனக்கு தகவல் தருவார்கள். அதை இந்திய தேர்தல் பிரிவுக்கு அனுப்பி வைப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.