உள்ளூர் செய்திகள் (District)

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் போடப்பட்ட போலீஸ் பாதுகாப்பால் ஏற்பட்ட பரபரப்பு

Published On 2022-06-22 05:43 GMT   |   Update On 2022-06-22 05:43 GMT
  • சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்திற்கு நேற்று இரவு முதல் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
  • ராயப்பேட்டை துணை போலீஸ் கமிஷனர் தலைமையில் 70 போலீசார் அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.

சென்னை:

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நாளை சென்னை வானகரத்தில நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு தரவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழக அலுவலகத்திற்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதை ஏற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்திற்கு நேற்று இரவு முதல் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. ராயப்பேட்டை துணை போலீஸ் கமிஷனர் தலைமையில் 70 போலீசார் அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.

ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அங்கு அத்துமீறி நுழைந்து ஏதாவது செய்து விடக்கூடாது என்பதற்காக இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. 70 போலீசார் தவிர எடப்பாடி பழனிசாமி அணியினரும் அங்கு கூடுதலாக இருந்தனர்.

அ.தி.மு.க. தலைமை கழகத்தில் 70 போலீசார் குவிக்கப்பட்டதும் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. ஏதோ சர்ச்சை ஏற்பட்டு விட்டதாக கருதினார்கள்.

இதை அறிந்ததும் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் போடப்பட்டு இருந்த பாதுகாப்பு அவசரம் அவசரமாக விலக்கி கொள்ளப்பட்டது. 70 போலீசாரும் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இருந்து வேகவேகமாக கலைந்து சென்றனர்.

போலீசார் ஏன் பாதுகாப்பிற்கு வந்தனர். எதற்காக திடீரென திரும்பி சென்றனர் என்ற விவரம் அறிவிக்கப்படவில்லை.

Tags:    

Similar News