ஆகாயத்தை பார்த்து எச்சில் துப்பலாமா?- அண்ணாமலையை விளாசிய சினேகன்
- நாங்கள் வரலாறு பேசினால் மட்டும் ஏன் இந்த ஆட்டம் ஆடுகிறீர்கள்.
- கமல் அரசியலும் செய்கிறார். தொழிலையும் பார்க்கிறார்.
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்தபோது மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனை விமர்சித்தார். இதற்கு பதிலடி கொடுத்து அக்கட்சியின் நிர்வாகி கவிஞர் சினேகன் கூறியதாவது:-
அண்ணாமலை சார் எங்க தலைவர் அமெரிக்காவில் அரசியல் பேசுவதாக சொல்லியிருக்கிறீர்கள். அவர் லாஸ் ஏஞ்சல்சிற்கு சொந்த காசில் போனார். நீங்கள் எந்த காசுல போயிருக்கீங்கனு எங்களுக்கு தெரியாது. அவர் அமெரிக்காவுல இருந்து அரசியல் பேசுறார்னா இப்போ நீங்க எங்க இருந்து பேசுறீங்க?
லாஸ் ஏஞ்சல்ஸ் அமெரிக்காவுல இருக்குன்னா. கலிபோர்னியா கரூருக்கு பக்கத்துலயா இருக்கு? அப்படி இல்லை அல்லவா?
யார் வரலாறு பேசினாலும் அமைதியாக இருக்கிறீர்கள். நாங்கள் வரலாறு பேசினால் மட்டும் ஏன் இந்த ஆட்டம் ஆடுகிறீர்கள். அரசியலை விட்டுவிட்டு தொழிலுக்கு சென்று விட்டார் என்கிறீர்கள். நீங்களும் தான் ஒருமுறை சொல்லி இருக்கிறீர்கள். அரசியல் சரியில்லை என்றால் நான் ஆடு மாடு மேய்க்க போய்விடுவேன் என்று.
அவர் அரசியலும் செய்கிறார். தொழிலையும் பார்க்கிறார். காரணம், அரசியல் கட்சி நடத்துவதற்கு பணம் தேவைப்படுகிறது. உங்களுக்கு கொட்டிக் கொடுப்பது போல மேலிருந்தும், கீழிருந்தும் கருப்பாகவும், வெள்ளையாகவும் கொட்டிக் கொடுக்க எங்களுக்கு யாரும் இல்லை. அப்படி கொடுத்தாலும் நாங்கள் வாங்குபவர்கள் அல்ல.
எனவே தான் தொழிலையும் பார்க்கிறோம். அரசியலும் செய்கிறோம். இனியாவது ஒருவரை விமர்சனம் செய்வதற்கு முன்பு, பண்போடு பகுத்து ஆய்ந்து பேசுங்கள். அதுதான் படித்தவர்களுக்கு நல்லது. ஆகாயத்தை பார்த்து எச்சில் துப்ப ஆசைப்படாதீர்கள். அது உங்கள் முகத்தில் தான் விழும் என்றார்.