மு.க.ஸ்டாலின் - அமைச்சர்கள் பற்றி முகநூலில் அவதூறு கருத்து வெளியிட்ட சாப்ட்வேர் என்ஜினீயர் கைது
- விஜில் ஜோண்சை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
- பத்மநாபபுரம் கோர்ட்டில் விஜில் ஜோண்சை ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தக்கலை:
குமரி மாவட்டம் திங்கள்நகர் பகுதியை சேர்ந்தவர் விஜில்ஜோண்ஸ் (வயது 40). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர் பெங்களூருவில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் விஜில் ஜோண்ஸ் முகநூலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மனோ தங்கராஜ் ஆகியோரை பற்றி அவதூறு கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இது குறித்து குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. வக்கீல் அணி அமைப்பாளர் ஜோசப்ராஜ் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். ஆனால் புகார் கூறப்பட்ட விஜில் ஜோண்சை கைது செய்ய போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பற்றி அவதூறு கருத்து வெளியிட்ட விவகாரம் தொடாபாக மதுரை ஐகோர்ட் கிளையிலும் ஜோசப் ராஜ் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் விஜில் ஜோண்சை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
அதன்படி அவரை பிடிக்க தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்தனர். அங்கு அவரை கைது செய்தனர்.
பெங்களூருவில் கைது செய்யப்பட்ட விஜில் ஜோண்ஸ் இன்று தக்கலைக்கு அழைத்து வரப்பட்டார்.
முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பற்றி முகநூலில் அவதூறு கருத்துகள் வெளியிட்டது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு பின் பத்மநாபபுரம் கோர்ட்டில் விஜில் ஜோண்சை ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.