டவுன் பஸ்சுக்குள் பயணிகளுடன் பயணம் செய்த தெரு நாய்
- டிரைவர் சீட்டின் பின்பக்கம் உள்ள பயணிகள் இருக்கைக்கு அடியில் பதுங்கியது.
- தொடர்ந்து நாயை அடித்து விரட்டி சிறிது தூரத்தில் பஸ்சை நிறுத்தி இறக்கிவிட்டனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடி - குடியாத்தம் இடையே இயங்கிவரும், அரசு டவுன்பஸ் மிகவும் பழுதான நிலையில் ஓடிக்கொண்டு இருந்தது. இதை புதியதாக மாற்றவேண்டும் என்கிற கோரிக்கை தொடர்ந்த நிலையில் தானியங்கி கதவுகளுடன் கூடிய புதிய டவுன்பஸ் அண்மையில் விடப்பட்டது.
இந்த பஸ் கே.வி.குப்பம் வழியாக சென்னறாயனபள்ளி பஸ் நிறுத்தத்தில் நின்று சில பயணிகளை இறக்கிவிட்டது. அப்போது குடியாத்தம் செல்ல ஒரு பயணி ஏறினார். அப்போது முன்னதாக ஒரு தெரு நாய் திடீர் என்று பஸ்சின் பின்பக்க வாசல் வழியாக உள்ளே ஏறிக்கொண்டது. அழையா விருந்தாளியான அந்த நாய் ஏறியதும் பஸ்சின் தானியங்கி கதவுகள் மூடி பஸ் புறப்பட்டது.
சிறிது தூரம் சென்றதும் பஸ்சுக்குள் நாய் சத்தம் கேட்டது. இதனால் நாய் கடித்துவிடுமோ என்று பயணிகள் அலறினர். இருக்கையை விட்டு இங்கும் அங்குமாக ஓடினர். எனினும் பின்பக்கம் ஏறிய நாய் இருக்கைகளுக்கு இடையே நகர்ந்து நகர்ந்து டிரைவரிடம் வந்து, என்ஜின்மீது ஏறி படுத்துக்கொண்டது. அதை அங்கிருந்து விரட்டியதும் டிரைவர் சீட்டின் பின்பக்கம் உள்ள பயணிகள் இருக்கைக்கு அடியில் பதுங்கியது.
தொடர்ந்து நாயை அடித்து விரட்டி சிறிது தூரத்தில் பஸ்சை நிறுத்தி இறக்கிவிட்டனர். உடனே தானியங்கி கதவை மூடியபடி பஸ், குடியாத்தம் நோக்கி புறப்பட்டு சென்றது. நாய் இல்லை என்பதை உறுதி செய்துகொண்ட பயணிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். இவ்வளவு நடந்தும் நாய் ஒருமுறைகூட குரைக்கவில்லை என்பது ஆச்சரியமாக இருந்தது.