உள்ளூர் செய்திகள்

திருமங்கலம் அருகே சாலையில் பாலை கொட்டி பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்

Published On 2023-03-23 05:20 GMT   |   Update On 2023-03-23 05:21 GMT
  • மதுரை மாவட்ட ஆவின் நிர்வாகம் முழு அளவில் பாலை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.
  • மதுரை மாவட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாக பால் உற்பத்தியாளர்கள் நடுரோட்டில் பாலை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருமங்கலம்,

தமிழக அரசு பால் கொள்முதல் விலையை ரூ. 31-ல் இருந்து ரூ.40-ஆக உயர்த்தி தரவேண்டும் என கடந்த ஒரு வாரமாக பல்வேறு மாவட்டங்களில் பால் உற்பத்தியாளர்கள் ஆவின் நிறுவனத்திற்கு பாலை அனுப்புவதை நிறுத்தும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டத்திற்கு நாள் ஒன்றுக்கு ஆவின் நிறுவனத்திற்கு ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 200 லிட்டர் பால் தேவைப்படுகிறது ஆனால் தற்போது போராட்டம் காரணமாக உற்பத்தியாளர்கள் மூலம் கொண்டு வரப்படும் பால் அளவு குறைந்துள்ளது. எனினும் மதுரை மாவட்ட ஆவின் நிர்வாகம் முழு அளவில் பாலை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.

மதுரை மாவட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாக பால் உற்பத்தியாளர்கள் நடுரோட்டில் பாலை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி 7-வது நாளான இன்றும் போராட்டம் நீடித்தது. திருமங்கலம் அருகே உள்ள நாகையாபுரம், மதிப்பனூர் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் திருமங்கலம்-அத்திப்பட்டி சாலையில் திரண்டனர்.

அவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த பாலை நடுரோட்டில் கொட்டி போராட்டம் நடத்தினர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். போராட்டத்துக்கு மதிப்பனூர் பால் பண்ணை தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்க மாவட்ட தலைவர் பெரிய கருப்பன், நிர்வாகிகள் உக்கிர பாண்டியன், கோவிந்தபாண்டி, சுப்பிரமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரவேண்டும் என கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால் தமிழக அரசு அதனை கொண்டு கொள்ளாமல் பேச்சுவார்த்தை நடத்தக்கூட அழைப்பு விடுக்க வில்லை. இதன் காரணமாக ஆவின் பால் உற்பத்தியாளர்கள் தனியார் பால் நிறுவனத்தை நாடிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆவின் நிறுவனம் பாதிக்கப்படும். எனவே பொதுமக்களின் நலன் கருதி அரசு உடனே கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News