தேனியிலும் மக்களை ஏமாற்ற வாக்குசேகரித்து வருகிறார்- தினகரன் மீது முத்தரசன் தாக்கு
- ஆர்.கே.நகர் தொகுதி மக்களை ஏமாற்றியதைப் போல தேனி மக்களையும் ஏமாற்ற பிரசாரம் செய்து வருகிறார்.
- அருணாச்சல பிரதேசத்தில் சீனா ஆக்கிரமித்து வருவதை பற்றி பேச மோடிக்கு மனமில்லை.
மேலசொக்கநாதபுரம்:
தேனி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் இன்று போடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
ஆர்.கே.நகர் சட்டமன்ற தேர்தலில் அப்பகுதி மக்களுக்கு 20 ரூபாய் டோக்கன் கொடுத்து தான் வெற்றி பெற்றவுடன் பெரியதொகை தருவதாக ஏமாற்றிச் சென்றவர்தான் இங்கு போட்டியிடும் டி.டி.வி. தினகரன்.
ஆர்.கே.நகர் தொகுதி மக்களை ஏமாற்றியதைப் போல தேனி மக்களையும் ஏமாற்ற பிரசாரம் செய்து வருகிறார். அவரை வாக்காளர்கள் நம்ப மாட்டார்கள். மத்தியில் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள் இயற்றப்பட்டபோதும் சரி தொழிலாளர்கள், பள்ளி மாணவர்களுக்கு எதிரான சட்டங்கள் இயற்றப்பட்ட போதும் மத்திய அரசுக்கு துணையாக இருந்தது அ.தி.மு.க. அரசு. தற்போது கூட்டணியில் இருந்து விலகி விட்டதாக நாடகமாடி வருகின்றனர்.
இவர்கள் கபட கூட்டணியை மக்கள் நம்ப மாட்டார்கள். திருவிழாவில் புகுந்து கொள்ளும் திருடன் தான் நகையை திருடி விட்டு திருடன் ஓடுகிறான்... திருடன் ஓடுகிறான்... என்று சத்தம் போடுவான். பொதுமக்கள் அவனை பிடிக்க செல்லும் போது இந்த திருடன் தப்பித்து ஓடி விடுவான். அதே போல்தான் மத்திய மந்திரிகள் இன்று தேர்தலுக்காக வாகன பேரணி, பிரசாரம் போன்றவற்றை செய்து வருகின்றனர்.
இந்தியாவில் வேலையின்மை, பொருளாதார சீர்கேடுகள், விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகளை திசை திருப்புவதற்காக கச்சத்தீவு பிரச்சினையை மோடி கையில் எடுத்து வருகிறார். அருணாச்சல பிரதேசத்தில் சீனா ஆக்கிரமித்து வருவதை பற்றி பேச மோடிக்கு மனமில்லை. இது போன்ற ஆட்சி மீண்டும் அமைந்தால் இந்தியா அழிவுப்பாதையில் செல்லும். எனவே மக்கள் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.