உள்ளூர் செய்திகள்

கவர்னர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீச்சு: ரவுடி கருக்கா வினோத் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Published On 2023-11-11 10:09 GMT   |   Update On 2023-11-11 10:09 GMT
  • ரவுடி கருக்கா வினோத் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.
  • ரவுடி கருக்கா வினோத் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.

சென்னை:

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை அருகே கடந்த மாதம் 25-ந்தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. சென்னை நந்தனம் எஸ்.எம்.நகரை சேர்ந்த பிரபல ரவுடி கருக்கா வினோத் மறைத்து கொண்டு வந்த பெட்ரோல் குண்டை கவர்னர் மாளிகையை நோக்கி வீசினான். அது கவர்னர் மாளிகை நுழைவாயில் முன்பு போடப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் முன்பு விழுந்து வெடித்தது.

பின்னர் தப்பி ஓட முயன்ற அவனை அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார் விரட்டி பிடித்தனர். அப்போது, அவனிடம் இருந்த பெட்ரோல் பாட்டில் ஒன்று விழுந்து உடைந்தது. அவன் மறைத்து வைத்திருந்த மேலும் 2 பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக ரவுடி கருக்கா வினோத் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவனை கைது செய்தனர். பின்னர் அவன் சிறையில் அடைக்கப்பட்டான்.

இந்த நிலையில் ரவுடி கருக்கா வினோத் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதையடுத்து ரவுடி கருக்கா வினோத் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார். இதையடுத்து ரவுடி கருக்கா வினோத் மீது தற்போது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

Tags:    

Similar News