தக்காளி வரத்து குறைந்தும் விலை இல்லாததால் திருப்பூர் விவசாயிகள் கவலை
- நேற்று 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.250 முதல் 350 வரை மட்டுமே விற்பனையானது.
- உள்ளூர் வியாபாரிகள் மட்டும் கொள்முதல் செய்வதால், விலை உயராமல் உள்ளது.
திருப்பூர்:
பருவ மழைகள் ஏமாற்றி வருவதால், திருப்பூர், உடுமலை, சுற்றுப்பகுதிகளில் கடும் வறட்சி நிலை காணப்படுகிறது. இதனால், தக்காளி சாகுபடி பெருமளவு குறைந்துள்ளது. கிணற்று நீரை ஆதாரமாகக் கொண்டு, ஒரு சில பகுதிகளில் மட்டும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடுமையான வெயில் காரணமாக, தக்காளி செடிகள் பாதித்தும், மகசூல் பெருமளவு குறைந்துள்ளது.
இதனால் திருப்பூர், உடுமலை சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. இருப்பினும் விலை உயராததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நேற்று 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.250 முதல் 350 வரை மட்டுமே விற்பனையானது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- வரத்து குறைவு காரணமாக, கூடுதல் விலை கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில் தரமற்ற பழங்கள், வெயிலுக்கு தாங்காதது உள்ளிட்ட காரணங்களினால், வெளி மாவட்ட வியாபாரிகள் வரத்து குறைந்துள்ளது.
உள்ளூர் வியாபாரிகள் மட்டும் கொள்முதல் செய்வதால், விலை உயராமல் உள்ளது. கடுமையான வறட்சி, நீர்ப்பற்றாக்குறையிலும் தக்காளி சாகுபடி செய்தும், விலையில்லாததால் நஷ்டமே ஏற்படுகிறது என்றனர்.