உடன்பிறந்த 9 சகோதரிகளின் திருமண செலவுக்காக கொள்ளையனாக மாறிய திருப்பூர் பனியன் தொழிலாளி
- வேலை பார்த்து கிடைத்த பணத்தை சிறுக சிறுக சேர்த்து தனது சகோதரிகள் சிலருக்கு திருமணம் செய்து வைத்தார்.
- இன்னும் சில சகோதரிகளுக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள திம்மநாயக்கன் பாளையம் சிவசக்தி நகரை சேர்ந்தவர் வடிவேல் (வயது40).
சம்பவத்தன்று இவர் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது மர்ம ஆசாமி ஒருவன் வீட்டுக்குள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து திருடன்... திருடன்... என வடிவேல் கூச்சலிடவே, அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதையடுத்து வீட்டின் கதவை இழுத்து பூட்டினர். மேலும் ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
கதவை பூட்டியதால் உள்ளே சிக்கிய திருடன் என்னசெய்வதென்று தெரியாமல் தவித்தான். பொதுமக்களிடமிருந்து தப்பிக்க வீட்டில் இருந்த சேலையை எடுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயன்றான்.
இதனிடையே அங்கு விரைந்து வந்த ஊத்துக்குளி போலீசார் திருடனை மடக்கி பிடித்தனர். அவனிடம் விசாரணை நடத்திய போது திருப்பூர் பலவஞ்சிபாளையத்தைச்சேர்ந்த முஸ்தபா மகன் இஸ்மாயில் (30) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது இஸ்மாயில் கொள்ளையில் ஈடுபட்டதற்கான காரணங்கள் குறித்து வாக்குமூலம் அளித்தார்.
கைதான இஸ்மாயிலுக்கு உடன்பிறந்த சகோதரிகள் 9 பேர் உள்ளனர். இவர்களில் சிலர் திருமணமாகி திருப்பூர் மற்றும் அருகில் உள்ள ஊர்களில் வசித்து வருகின்றனர். சகோதரிகள் சிலருக்கு திருமணமாகவில்லை. இஸ்மாயில் ஒரே மகன் என்பதால் அவர்தான் குடும்பத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்காக திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். ஆனால் அதில் கிடைக்கும் பணத்தை வைத்து குடும்பத்தை நடத்த முடியவில்லை.
இருப்பினும் வேலை பார்த்து கிடைத்த பணத்தை சிறுக சிறுக சேர்த்து தனது சகோதரிகள் சிலருக்கு திருமணம் செய்து வைத்தார். இன்னும் சில சகோதரிகளுக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். ஆனால் எவ்வளவோ முயன்றும் சகோதரிகளின் திருமண செலவுக்கான பணத்தை சேர்க்க முடியவில்லை.
இதனால் என்னசெய்வதென்று யோசித்துள்ளார். அப்போது அதிக பணம் வேண்டுமென்றால் திருட்டில்தான் ஈடுபட வேண்டும் என்று எண்ணிய அவர் திருடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். அதன்படி கடந்த 2021ம் ஆண்டு அவினாசியில் உள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்து திருட முயற்சித்துள்ளார். ஆனால் அவரை அப்பகுதி பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து 6 மாத சிறை தண்டனைக்கு பிறகு வெளியே வந்த அவர், எப்படியாவது பணத்தை புரட்டி விட வேண்டும் என்பதற்காக மீண்டும் 2022-ம் ஆண்டு பெருமாநல்லூர் பகுதியில் உள்ள வீட்டில் திருட முயன்றுள்ளார். அப்போதும் அவர் பொதுமக்கள் பிடியில் சிக்கி கொண்டார்.
நேற்று முன்தினம் ஊத்துக்குளி அருகே உள்ள திம்மநாயக்கன் பாளையம் சிவசக்தி நகரை சேர்ந்த வடிவேல் என்பவரது வீட்டிற்குள் புகுந்து திருட முயற்சித்துள்ளார். அங்கேயும் அவர் சிக்கிக்கொண்டார். இஸ்மாயிலை வீட்டிற்குள் வைத்து பூட்டியதால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த அவர் அவமானமும் அடைந்தார். மேலும் தனது சகோதரிகளின் திருமண செலவுக்காக 3 முறை முயற்சி செய்தும் தனது கொள்ளை திட்டம் நிறைவேறாததால் மிகவும் வருத்தமடைந்தார்.
வெளியே சென்றாலும் யாரிடமும் தலை காட்ட முடியாது என்று எண்ணிய அவர், வடிவேல் வீட்டின் பீரோவில் இருந்த சேலையை எடுத்து அங்கிருந்த கொக்கியில் மாட்டி தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் போலீசார் வந்து இஸ்மாயிலை மீட்டனர்.
மேலும் இஸ்மாயில் போலீசாரிடம் கூறுகையில், 3 முறை முயன்றும் என்னால் கொள்ளையடிக்க முடியவில்லை. எனவே எனக்கு திருடுவதற்கு சரியான பயிற்சி இல்லை. அதனால்தான் பொதுமக்களிடம் சிக்கினேன் என தெரிவித்துள்ளார். உடன் பிறந்த 9 சகோதரிகளின் திருமண செலவுக்காக பனியன் தொழிலாளி கொள்ளையனாக மாறிய சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.