அவ்வையார் சிலைக்கு நாளை அமைச்சர்கள் மாலை அணிவிக்கிறார்கள்- தமிழக அரசு ஏற்பாடு
- அதியமானுக்காகக் காஞ்சியிலிருந்து ஆட்சிப் புரிந்த தொண்டைமானிடம் தூது சென்று நிகழவிருந்த போரை நிறுத்திய பெருமை மிக்கவர் அவவையார்.
- உலக வரலாற்றில் இரண்டு வேந்தர்களுக்கிடையில் தூது சென்ற பெரு மடந்தையராகப் பெருமை கொண்டவர் அவ்வையார் ஆவார்.
சென்னை:
ஈராயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மக்கள் நன்கு அறிந்திருக்கும் புலவர் பெருமாட்டியருள் அவ்வையாரின் அருமைத் திருப்பெயர் என்றும் அழியாமல் நிலைத்திருக்கும் திருப்பெயரும் தவப்பெயருமாகும்.
'அகர முதல எழுத்தெல்லாம்' என்பது போல ஒளவை முதல அறிவெல்லாம் என்று அறிவுக்கே பரியாய நாமமாக அவ்வையார் ஆண், பெண், இளைஞர், முதியவர் என எல்லோராலும் வழிபாட்டுணர்ச்சியோடு வணங்கப்படுகிறார்.
அதியமானுக்காகக் காஞ்சியிலிருந்து ஆட்சிப் புரிந்த தொண்டைமானிடம் தூது சென்று நிகழவிருந்த போரை நிறுத்திய பெருமை மிக்கவர் அவவையார். உலக வரலாற்றில் இரண்டு வேந்தர்களுக்கிடையில் தூது சென்ற பெரு மடந்தையராகப் பெருமை கொண்டவர் அவ்வையார் ஆவார்.
சேரமான் மாரி வண்கோவும், சோழன் ராச சூயம் வேட்ட பெரு நற்கிள்ளியும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும் ஒருங்கிருப்பக் கண்டு உவந்து' என்றும் தமிழ் மூவேந்தர்கள் இவ்வாறே இருப்பீர்களாக' என அறிவுறுத்திய புலமைச் செல்வியார் ஆவார். நெடுமான் அஞ்சி போர்க் களத்தில் வேல் பாய்ந்து இறந்தபோது, அவ்வையார் வருந்திப் பாடிய கையறு நிலைப்பாட்டு மிகவும் உருக்கம் வாய்ந்தது.
சங்கப் புலமைப் பெரும் செவ்வியராகிய இப்பெருமாட்டியார் பாடியனவாக உள்ள ஐம்பத்தொன்பது பாடல்களுள் அகப்பொருள் பற்றியன இருபத்தாறாகும். எஞ்சிய முப்பத்து மூன்று பாடல்களுள் புறப்பொருளுக்குரியன வாய்ப் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன.
மாந்தர் குலத்திற்குப் பெருமை சேர்த்த அவ்வை பெருமாட்டியாரைப் போற்றும் வகையில் உலக மகளிர் நாளான 08.03.2024 வெள்ளிக்கிழமையன்று காலை 10 மணிக்கு தமிழ்நாடு அரசின் சார்பில், தமிழ் வளர்ச்சித் துறையால், சென்னை காமராசர் சாலையில் அமைந்துள்ள அவ்வையாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்தலும், தமிழ்ப் பெருமாட்டியின் திருவுருவப்படத்திற்கு மலர் வணக்க நிகழ்வும் நடைபெற உள்ளன. அமைச்சர் பெருமக்கள், மேயர், துணை மேயர், அரசு உயர் அலுவலர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்கள், பொதுமக்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.