உள்ளூர் செய்திகள்

தேனி அருகே சுற்றுலா பஸ் கவிழ்ந்து மாணவர்கள், ஆசிரியர்கள் படுகாயம்

Published On 2024-09-28 05:58 GMT   |   Update On 2024-09-28 05:58 GMT
  • அதிகாலை நேரம் என்பதால் அப்போது பஸ்சில் இருந்த மாணவர்கள் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தனர்.
  • க.விலக்கு போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வருசநாடு:

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள காப்புக்காடு பகுதியில் தனியார் மெட்ரிக் பள்ளி உள்ளது. இந்த பள்ளியைச் சேர்ந்த 90க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளை காலாண்டு தேர்வு விடுமுறையை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு 2 பஸ்களில் ஆசிரியர்கள் சுற்றுலா அழைத்து வந்தனர்.

இன்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை அடுத்துள்ள குன்னூர் டோல்கேட் பகுதியில் வந்து கொண்டிருந்த போது 46 மாணவர்களை ஏற்றி கொண்டு வந்த ஒரு பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு இறங்கி வயலுக்குள் தலை குப்புற கவிழ்ந்தது.

அதிகாலை நேரம் என்பதால் அப்போது பஸ்சில் இருந்த மாணவர்கள் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தனர். திடீரென பஸ் கவிழ்ந்த நிலையில் இடிபாடுகளுக்குள் சிக்கி அவர்கள் கூச்சலிட்டனர்.

இந்த சம்பவத்தை கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் மற்றொரு பஸ்சில் வந்தவர்களும் விபத்தில் சிக்கி காயம் அடைந்த மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்களை மீட்டனர்.

இந்த விபத்தில் காயம் அடைந்த சுமார் 15-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மற்றும் முத்துமாரி, சரண்யா உள்பட 4 ஆசிரியர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் மாணவர்களான சஞ்சனா (வயது 8), ஸ்டெபி (11), கிருஷ்ணரிஷி (13), சுர்ஜித் (9), ஆதிரா (13), அபிஷேக் (13), ஜெர்வின் ஜீனு (11), ரித்திக் (13), லிபிசா (10), ரோசிக் (11), டிரைவர் புரோசன் (30), ஆசிரியைகள் சுகன்யா (30), சரண்யா (38), தங்கம் (53), ஷோபா (36) உள்பட 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த க.விலக்கு போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று இரவு கிளம்பிய பஸ் டிரைவர் சரிவர தூங்காததால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர். 

Tags:    

Similar News