அண்ணா பூங்காவில் பூத்துக்குலுங்கும் ரோஜா மலர்கள்- சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
- பூங்காவில் பல்வேறு வகை ரோஜா செடிகள் வளர்க்கப்படுகிறது.
- மலர் செடிகள் நடவு செய்து பணியாளர்கள் பராமரித்து வருகிறார்கள்.
ஏற்காடு:
தமிழகத்தில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று ஏற்காடு. இங்கு நிலவும் குளிர்ச்சியான காலநிலை சுற்றுலா பயணிகளை சுண்டி இழுக்கிறது. இதனால் இங்கு வருடந்தோரும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்குள்ள தாவரவியல் பூங்கா, மான் பூங்கா, அண்ணா பூங்கா, ஏரிக்கரை பூங்கா, கிளியூர் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்து சுற்றுலா பயணிகள் ரசிக்கின்றனர். அதுபோல் ஏரியில் குதுகலமாக படகுசவாரி செய்து உற்சாகம் அடைகின்றனர்.
இந்த நிலையில் நடப்பாண்டுக்கான கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சிக்கான முன் ஏற்பாடுகள் தோட்டக்கலை துறை சார்பில் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக மலர் செடிகள் நடவு செய்து பணியாளர்கள் பராமரித்து வருகிறார்கள்.
மேலும் பூங்காவில் பல்வேறு வகை ரோஜா செடிகள் வளர்க்கப்படுகிறது. இந்த ரோஜா மலர்களுக்கு தனி கவனம் செலுத்தி வளர்க்கப்படுகிறது. தற்போது கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் ஏற்காடு அண்ணா பூங்காவில் பல வகை நிறங்களில் ரோஜா மலர்கள் பூத்துக்குலுங்குகிறது.
இது கண்களை ஈர்க்கும் விதமாக அமைந்துள்ளது. பூத்துக்குலுங்கும் இந்த மலர்களை மனதில் மகிழ்ச்சி ததும்ப வியந்து பார்த்தப்படி அதன் முன்பு நின்று செல்பி எடுத்து சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். இதே போல் ஏற்காடு ரோஜா தோட்டத்திலும் பல வகை வண்ண ரோஜா மலர்கள் பூத்துக்குலுங்குகிறது.