செல்போன் திருடனை விரட்டிச்சென்ற பெண் தவறி விழுந்து படுகாயம்
- மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம வாலிபர் திடீரென தாட்சாயிணி கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பினான்.
- அதிர்ச்சி அடைந்த தாட்சாயிணி கொள்ளையனை பின் தொடர்ந்து விரட்டி சென்றார்.
போரூர்:
ராமாபுரம் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தாட்சாயிணி (வயது47). கணவரை இழந்த இவர் வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் ஐ.டி நிறுவன கேண்டீனில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.
இன்று காலை 8மணி அளவில் அவர், வழக்கம் போல வீட்டில் இருந்து வளசரவாக்கம் பெத்தானியா நகர் வழியாக வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம வாலிபர் திடீரென தாட்சாயிணி கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பினான். இதனால் அதிர்ச்சி அடைந்த தாட்சாயிணி கொள்ளையனை பின் தொடர்ந்து விரட்டி சென்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி அவர் சாலையில் தவறி கீழே விழுந்தார். இதில் தாட்சாயிணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தாட்சாயிணியின் நெற்றியில் 6 தையல் போடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் பறித்து தப்பிய கொள்ளையனை அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சியை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.