திண்டிவனம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சென்னை மாணவர்கள் 2 பேர் பலி
- திண்டிவனம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி சென்னையை சேர்ந்த கல்லூரி, பள்ளி மாணவர்கள் பலியானர்கள்.
- நண்பரின் அக்காள் திருமணத்திற்கு சென்ற கல்லூரி, பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திண்டிவனம்:
சென்னை எம்ஜிஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரி (வயது 19), சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த கிருபாகரனும் (17) நண்பர்களாவர். கிருபாகரன் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இந்நிலையில் இவர்களும், இவர்களது நண்பர்கள் 4 பேரும் 3 மோட்டார் சைக்கிளில் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு நண்பரின் அக்காள் திருமணத்திற்கு சென்றனர். இவர்கள் அனைவரும் விலை உயர்ந்த அதிக வேகத்தில் செல்லும் மோட்டார் சைக்கிளில் சென்றனர். ஹரியும் கிருபாகரனும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை ஹரி ஓட்டிச்சென்றார்.
திண்டிவனம் அடுத்த பாதிரி கிராமம் அருகே வந்த போது ஹரி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் தூக்கி வீசப்பட்டதில் ஹரி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி துடிதுடித்து இறந்தார். இவரது பின்னால் அமர்ந்து வந்த பிளஸ்-2 மாணவன் கிருபாகரன் படுகாயங்களுடன் 108 ஆம்புலன்சில் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாணவன் கிருபாகரன் இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஒலக்கூர் போலீசார் 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மோட்டார் சைக்கிள் மீது மோதிய அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.
நண்பரின் அக்காள் திருமணத்திற்கு சென்ற கல்லூரி, பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.