அ.தி.மு.க. பகுதி செயலாளர் வீடு உள்பட 5 இடங்களில் சோதனை- லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி
- அ.தி.மு.க. பகுதி செயலாளர் மூர்த்தி 5-வது குற்றவாளியாகவும், அவரது மனைவி சுதா 6-வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
- அரசு அதிகாரிகள் சூழ்ச்சி செய்து பட்டா மாறுதல் உள்ளிட்ட குற்றச் செயல்களுக்கு உடந்தையாக இருந்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளச்சேரி:
அ.தி.மு.க. வேளச்சேரி பகுதி செயலாளராக இருப்பவர் எம்.ஏ.மூர்த்தி, வேளச்சேரி ஆண்டாள் நகர் விரிவாக்கம் 3-வது தெருவில் வசித்துவரும் இவரும், அவரது மனைவி சுதாவும், 1200 சதுர அடி மதிப்பிலான அரசு நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு தமிழக அரசின் வருவாய் துறை கட்டுப்பாட்டில் இருந்த 1200 சதுர அடி நிலத்தை 600 சதுர அடியாக இரண்டாக பிரித்து தாசில்தார் நில அளவையாளர், சர்வேயர் ஆகியோரது துணையுடன் நில அபகரிப்பு நடைபெற்றது தெரிய வந்தது.
இது தொடர்பாக கோர்ட்டு உத்தரவின் பேரில் சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் மூர்த்தி, அவரது மனைவி உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் வேளச்சேரி தாலுகா அலுவலகத்தில் பணிபுரிந்த சிறப்பு தாசில்தாரான மணிசேகர் முதலாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அதே அலுவலகத்தில் சர்வே துணை ஆய்வாளராக பணிபுரிந்த லோகநாதன் 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
இவர் கோவை மாவட்டம் சூலூரை சேர்ந்தவர். 3-வது குற்றவாளியாக துணை ஆய்வாளராக பணிபுரிந்த சந்தோஷ் குமார் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. மேலும் வேளச்சேரி தாலுகா அலுவலகத்தில் முதுநிலை வரைவாளராக பணிரிபுரிந்த பெண் அதிகாரியான ஸ்ரீதேவி மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது. இவர் 4-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
அ.தி.மு.க. பகுதி செயலாளர் மூர்த்தி 5-வது குற்றவாளியாகவும், அவரது மனைவி சுதா 6-வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலமானது அரசால் கையகப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டு இருந்த நிலமாகும். அந்த இடத்தை பாதுகாக்க வேண்டிய அதிகாரிகள் நில அபகரிப்புக்கு துணை போய் இருப்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து இருக்கிறார்கள்.
அரசு அதிகாரிகள் சூழ்ச்சி செய்து பட்டா மாறுதல் உள்ளிட்ட குற்றச் செயல்களுக்கு உடந்தையாக இருந்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாறுதல் நடவடிக்கைகளை 3 மணி நேரத்திற்குள் அரசு அதிகாரி முடித்து கொடுத்து அதற்கு லஞ்சம் பெற்றிருப்பதும் தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் மூர்த்தியும், அவரது மனைவியும் அரசு நிலத்தை சட்ட விரோதமாக அபகரிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் செயல்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இதையடுத்து வேளச்சேரியில் உள்ள மூர்த்தியின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இன்னொரு இடத்திலும் சோதனை நடைபெற்றது. இதே போன்று மேற்கு மாம்பலம், கோவை உள்பட 5 இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.