உள்ளூர் செய்திகள் (District)

அடுத்தமாதம் 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா: விநாயகர் சிலை தயாரிப்பு தீவிரம்

Published On 2023-08-13 10:16 GMT   |   Update On 2023-08-13 10:16 GMT
  • விநாயகர் சிலை தயாரிப்பு பணி பல்வேறு இடங்களில் தீவிரமாக நடந்து வருகிறது.
  • பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலை சுமார் 10 அடி உயரம் வரை வித,விதமாக உருவாக்கப்பட்டு வருகிறது.

பொன்னேரி:

விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் 18-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் விநாயகர் சிலைகளை பொது இடத்தில் வைத்து வழிபாடு நடத்தி நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். சுமார் 5 அடி முதல் 20 அடி வரை விதவிதமான விநாயகர் சிலைகள் வழிபாட்டுக்கு வைக்கப்படும்.

இதைத்தொடர்ந்து விநாயகர் சிலை தயாரிப்பு பணி பல்வேறு இடங்களில் தீவிரமாக நடந்து வருகிறது.

பொன்னேரியை அடுத்த சயனாவரம், வெள்ளோடை, கிருஷ்ணாபுரம், ஆகிய பகுதிகளில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணிகளில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு பாகுபலி விநாயகர், கல்வெட்டு விநாயகர், ராஜ விநாயகர், தர்பார் விநாயகர், செண்டு வாகன விநாயகர், மூல வாகன விநாயகர், ஆதியோகி சிவன் விநாயகர், உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலை சுமார் 10 அடி உயரம் வரை வித,விதமாக உருவாக்கப்பட்டு வருகிறது.

பெருபாலான சிலைகளை வடிவமைக்கும பணிகள் முடிந்து உள்ளன. அதில் அழகிய வர்ணம் தீட்டும் பணியில் தொழிலாளர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். இவை பார்வைக்காக பொன்னேரி தச்சூர் சாலை, சயனாவரம் ,கிருஷ்ணாபுரம் சாலை அருகே வைக்கப்பட்டுள்ளன. விநாயகர் சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பொன்னேரி பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் கூறும்போது,

விநாயகர் சிலைகள், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாதவாறு எளிதில் தண்ணீரில் கரையக்கூடிய வகையில் தயாரித்து வருகிறோம். இதற்காக கிழங்கு மாவு, தேங்காய் நார், பேப்பர்கூழ், ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. 2 அடி முதல் 10 அடி வரை விநாயகர் சிலைகள் பல மாடல்களில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவை ரூ.2 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்கப்படும். இன்னும் சில நாட்களில் சிலைகளில் வர்ணம் பூசும் வேலைகள் முடிந்து விற்பனைக்கு தயாராகி விடும் . சிலைகள் வாங்க பல கிராமங்களில் இருந்து முன்கூட்டியே அட்வான்ஸ் செய்து புக்கிங் செய்து உள்ளனர். ஏராளமான ஆர்டர்கள் வந்துள்ளன என்றார்.

வெள்ளோடை பகுதியில் விநாயகர் சிலை செய்து வரும் பிரபு என்பவர் கூறும்போது, ராஜ விநாயகர் கற்பக விநாயகர் பாம்பே மாடல்விநாயகர், தர்பார் விநாயகர் மற்றும் பல மாடல்களில் சிலைகள் செய்து வருகிறோம் 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன என்றார்.

Tags:    

Similar News