தேர்தல் வந்தால் மட்டும் எங்கள் ஞாபகம் வருகிறதா? காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியிடம் வாக்காளர் சரமாரி கேள்வி
- கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த ஜோதிமணி எம்.பி.யிடம் சரமாரி கேள்வி எழுப்பிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- போலீசார் ஜோதிமணியிடம் கேள்வி எழுப்பிய வாக்காளரை அழைத்து சென்றனர்.
குளித்தலை:
சுதந்திர தின விழாவை முன்னிட்டு கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மூக்கணாங்குறிச்சி கந்தசாரப்பட்டி பகுதியில் கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்பதற்காக கரூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வருகை தந்தார்.
அப்போது கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஆண் ஒருவர், ஜோதி மணியை பார்த்து தேர்தல் நேரம் வரும்போது மட்டுமே எங்களை உங்களுக்கு ஞாபகம் வருமா? வாக்கு கேட்க மட்டுமே வந்தீர்கள். அதன் பின்னர் இந்த பகுதியில் உங்களை பார்க்க முடியவில்லை. நன்றி கூற கூட நீங்கள் வரவில்லை என காட்டமாக கூறினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஜோதிமணி தொகுதியில் பல்வேறு இடங்களுக்கு மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளேன். நீங்கள் வேண்டும் என்று என்னிடம் தகராறு செய்கிறீர்கள் என ஆவேசமாக பதிலளித்தார்.
ஆனால் அந்த நபரோ எதையும் கண்டு கொள்ளாமல் போன் செய்தால் ஒரு முறையாவது எடுத்துப் பேசி உள்ளீர்களா? எம்.பி. என்கிற முறையில் நாங்கள் யாரிடம் சென்று முறையிடுவது? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. கிராம சபை கூட்டத்தில் கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் அவரை சூழ்ந்தனர்.
பின்னர் போலீசார் ஜோதிமணியிடம் கேள்வி எழுப்பிய வாக்காளரை அங்கிருந்து அழைத்து சென்றனர். தற்போது கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த ஜோதிமணி எம்.பி.யிடம் சரமாரி கேள்வி எழுப்பிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.