உள்ளூர் செய்திகள்

வளசரவாக்கம் தொழிலாளி சாவில் திருப்பம்- கணவரை கழுத்தை நெரித்து கொன்ற மனைவி

Published On 2022-07-06 09:09 GMT   |   Update On 2022-07-06 09:09 GMT
  • குமாரின் தொண்டை பகுதியில் சிறிய காயம் இருப்பதை கண்டு போலீசார் சந்தேகம் அடைந்தனர்.
  • மேலும் டாக்டர்கள் கொடுத்த பிரேத பரிசோதனை அறிக்கையில் குமாரின் கழுத்தில் சிராய்ப்பு காயம் மற்றும் ரத்த கட்டு இருப்பதாகவும், கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டு இருந்தது.

போரூர்:

வளசரவாக்கம் அடுத்த கைகாங்குப்பம் வ.உ.சி தெருவை சேர்ந்தவர் குமார்(வயது48). கூலி தொழிலாளி. இவரது மனைவி விஜயா. வீட்டு வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

குமாருக்கு குடிபழக்கம் உண்டு. தினசரி மது குடித்துவிட்டு சரியாக வேலைக்கு செல்வது கிடையாது. இதன் காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி மாலை வீட்டில் மர்மமான முறையில் குமார் இறந்து கிடந்தார். வளசரவாக்கம் உதவி கமிஷனர் கவுதமன் மற்றும் போலீசார் குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது குமாரின் தொண்டை பகுதியில் சிறிய காயம் இருப்பதை கண்டு போலீசார் சந்தேகம் அடைந்தனர். மேலும் டாக்டர்கள் கொடுத்த பிரேத பரிசோதனை அறிக்கையில் குமாரின் கழுத்தில் சிராய்ப்பு காயம் மற்றும் ரத்த கட்டு இருப்பதாகவும், கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து குமாரின் மனைவி விஜயாவை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் கணவர் குமாரை கழுத்தை நெரித்து அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

விஜயா போலீசாரிடம் கூறும்போது, சம்பவத்தன்று மதுபோதையில் வீட்டுக்கு வந்த குமார் தாம்பத்திய உறவுக்கு அழைத்து தொடர்ந்து தொல்லை கொடுத்தார். இதற்கு நான் மறுத்தும் அவரது தொல்லை எல்லை மீறியது.

இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த நான் கணவர் குமாரின் கழுத்தை நெரித்த போது இறந்து விட்டார் என்று தெரிவித்து உள்ளார்.

கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று மேலும் விஜயாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News