உள்ளூர் செய்திகள்

இளம்பெண்ணை பலாத்காரம் செய்த ராணுவ வீரர்- திருப்பூர் கலெக்டரிடம் புகார்

Published On 2023-05-15 07:45 GMT   |   Update On 2023-05-15 07:45 GMT
  • இனிமேல் தொந்தரவு செய்தால் உன்னுடைய நிர்வாண புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவோம் என்று மிரட்டினர்.
  • வெங்கடேசன், கார்த்திகா மற்றும் வெங்கடேசனின் பெற்றோர் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருப்பூர்:

திருப்பூர் இடுவம்பாளையம் கரட்டுத் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் தனலெட்சுமி (வயது 24). இவர் இன்று திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

கடந்த 2019 ம் ஆண்டு மூர்த்தி என்பவருடன் எனக்கு திருமணம் நடைபெற்றது. எனக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் எனக்கும் மூர்த்திக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 6 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகிறோம். இந்த நிலையில் ராணுவத்தில் பணியாற்றி வரும் உறவினரான தேனியை சேர்ந்த வெங்கடேசன் ( 25) என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் நெருக்கமாக பழகி வந்தோம்.

நேரில் என்னை சந்தித்த வெங்கடேசன் என்னை திருமணம் செய்து கொள்வதாகவும், எனது குழந்தையை பார்த்து கொள்வதாகவும் கூறி உல்லாசத்துக்கு அழைத்தார். நான் மறுக்கவே வலுக்கட்டயமாக என்னுடன் உறவு வைத்துக் கொண்டார். அப்போது செல்போனில் புகைப்படம் எடுத்து விட்டார். நான் வெங்கடேசனுடன் பழகி வருவது எங்கள் வீட்டில் தெரிந்து விட்டது.

இதையடுத்து வெங்கடேசனிடம் என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டதற்கு தற்போதைக்கு வேண்டாம் எனக்கூறி மறுத்து வந்தார். தொடர்ந்து என்னை உடலுறவுக்கு வற்புறுத்தி அழைத்து வந்தார். ஆனாலும் நான் அதற்கு மறுக்கவே அவரது செல்போனில் எடுத்து வைத்திருந்த என்னுடைய புகைப்படங்களை காட்டி உடலுறவுக்கு அழைத்தார். மறுத்தால் என்னுடைய நிர்வாண புகைப்படங்களை இணையதளத்திலும், வாட்ஸ்அப்பிலும் பகிர்ந்து விடுவதாக கூறி என்னை மிரட்டினார். பயந்து போன நான் அவருடன் வலுக்கட்டாயமாக உடலுறவில் இருந்து வந்தேன். இதனால் நான் கடந்த மார்ச் மாதம் கருத்தரித்தேன். இது குறித்து நான் வெங்கடேசனிடம் கூறியதற்கு என்னுடைய கருவை கலைக்குமாறு கூறினார். ஆனால் நான் அதற்கு மறுத்துவிட்டேன்.

இந்தநிலையில் வெங்கடேசன் கோவையில் உள்ள அவரது தோழி கார்த்திகா என்பவர் என்னை சந்திக்க வந்துள்ளதாக கூறியதன் பேரில் கடந்த 29-3-23 அன்று நான் கார்த்திகாவை திருப்பூரில் வைத்து சந்தித்தேன். அப்போது நாங்கள் ஜூஸ் குடிக்க சென்ற போது எனக்கு தெரியாமல் ஏற்கனவே கொண்டு வந்திருந்த கருக்கலைப்பு மாத்திரையை ஜூஸ்சில் கலந்து கொடுத்து குடிக்க வைத்தார்.

இதனால் அடுத்தநாள் எனது கரு கலைந்து விட்டது. கார்த்திகா எனக்கு போன் செய்து நான்தான் வெங்கடேசனின் பேச்சை கேட்டு ஜூஸ்சில் கரு கலைப்பு மாத்திரை கலந்து கொடுத்தேன் என்றார். இது பற்றி வெங்கடேசனிடம் கேட்ட போது நான் ஒரு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய உள்ளேன். நீ கர்ப்பமாக இருந்தால் எனக்குதான் பிரச்சினை என்று கூறி பேசுவதை தவிர்த்தார். நான் தொலைபேசியில் அழைத்து பேச முயற்சித்த போது எனது செல்போன் எண்ணை பிளாக் செய்து விட்டார்.

கடந்த 5-4-23 அன்று வெங்கடேசனின் பெற்றோர் என்னை நேரில் சந்திக்க வந்தனர். அப்போது இனிமேல் எனது மகனிடம் பேசவோ, பழகவோ கூடாது. அவனுக்கு நல்ல இடத்தில் வசதியான பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்கப்போகிறோம். இனிமேல் எனது மகனை தொந்தரவு செய்தால் உன்னுடைய நிர்வாணப் புகைபடங்களை இணையதளத்தில் வெளியிடுவோம் என்று மிரட்டினர்.

இதுகுறித்து மகளிர் போலீசில் புகார் செய்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே வெங்கடேசன், கார்த்திகா மற்றும் வெங்கடேசனின் பெற்றோர் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News