உள்ளூர் செய்திகள்

சாத்தூரில் திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணிடம் நூதன மோசடி செய்த வாலிபர்

Published On 2022-06-20 06:03 GMT   |   Update On 2022-06-20 06:35 GMT
  • சித்ரா அந்த வாலிபருக்கு தனது புகைப்படத்தை வாட்ஸ்-அப்பில் அனுப்பி இருக்கிறார்.
  • அந்த வாலிபரின் செயல் சித்ராவுக்கு பிடிக்காததால் தன்னை தொடர்பு கொள்ள வேண்டாம் என கூறியிருக்கிறார்.

விருதுநகர்:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கதிர்வேல் நகரைச் சேர்ந்தவர் சித்ரா (வயது 23). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது தந்தை இறந்து விட்டார். இதனால் தனது தாயுடன் சென்னையில் வசித்து வந்தார்.

அங்கு சித்ராவுக்கும், அவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த அஜித் என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 2020-ம் ஆண்டு இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டு சென்னையிலேயே குடித்தனம் நடத்தி வந்தனர்.

அஜித்திற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவர் அடிக்கடி மது குடித்துவிட்டு தகராறு செய்தபடி இருந்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.

கணவரின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்ததால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கணவரை பிரிந்து கோவில்பட்டிக்கு வந்து தனது தாயுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் சித்ரா மறுமணம் செய்ய முடிவு எடுத்துள்ளார். இதற்காக ஒரு திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தார்.

அதில் தனது பெயர், முகவரி, தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களை தெரிவித்திருந்தார். இந்தநிலையில் வாலிபர் ஒருவர் சித்ராவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசி, தான் பெண் பார்த்து வருவதாகவும், ஆகவே உங்களது புகைப்படத்தை அனுப்புமாறு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சித்ரா அந்த வாலிபருக்கு தனது புகைப்படத்தை வாட்ஸ்-அப்பில் அனுப்பி இருக்கிறார். அதன்பேரில் அந்த வாலிபர் சித்ராவை அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார். ஆனால் அந்த வாலிபரின் செயல் சித்ராவுக்கு பிடிக்காததால் தன்னை தொடர்பு கொள்ள வேண்டாம் என கூறியிருக்கிறார்.

இருந்தபோதிலும் அந்த வாலிபர் சித்ராவின் செல்போனுக்கு பேசியபடி இருந்திருக்கிறார். அப்போது அவர் பெங்களூருவில் உள்ள வங்கியில் வேலை பார்ப்பதாகவும், தனது தாய்-தந்தையுடன் இருப்பதாகவும், தங்கைக்கு திருமணமாகி விட்டதாகவும் கூறியிருக்கிறார்.

மேலும் சித்ராவை திருமணம் செய்ய விரும்புவதாகவும், ஆவகே அவரை சந்திக்க கோவில்பட்டி வருவதாக தெரிவித்துள்ளார். அதற்கு சித்ராவும் சம்மதித்துள்ளார். அதன்படி நேற்று காலை கோவில்பட்டி பஸ் நிலையத்தில் தனது இரு சக்கர வாகனத்துடன் சித்ரா காத்திருந்தார்.

அப்போது அவருடன் பேசிய வாலிபர் பஸ்சில் இருந்து இறங்கி வந்தார். ஓட்டலுக்கு சாப்பிட செல்லலாம் என்று கூறி இருக்கிறார். இதையடுத்து அவர்கள் இருவரும் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சித்ராவின் இருசக்கர வாகனத்தில் சென்றனர்.

அங்கு சாப்பிட்டு விட்டு புறப்பட்டபோது அந்த வாலிபர் சித்ராவின் கழுத்தில் தங்கச்சங்கிலி என்று கூறி ஒரு செயினை அணிவித்தார். மேலும் சித்ரா அணிந்திருந்த செயினை கழற்றி தனது கழுத்தில் அணிந்து கொண்டார். பின்பு இருவரும் இரு சக்கர வாகனத்தில் கோவில்பட்டிக்கு திரும்பிச் சென்றனர்.

அப்போது இருசக்கர வாகனத்தை அந்த வாலிபரே ஓட்டி வந்தார். சித்ரா வைத்திருந்த அவரது கைப்பை மற்றும் செல்போனை அந்த வாலிபர் வாங்கி வைத்துக் கொண்டார். திடீரென அவர் வாகனத்தில் பழுது இருப்பது போல் தெரிகிறது என கூறியிருக்கிறார். அதனை சரி செய்து வருவதாக கூறி சித்ராவை ஒரு இடத்தில் நிற்க வைத்து விட்டு சென்றார்.

ஆனால் வெகு நேரமாகியும் அந்த வாலிபர் திரும்பி வரவில்லை. தனது செல்போனும் அந்த வாலிபரிடம் சிக்கிக் கொண்டதால் அவரை தொடர்பு கொள்ள முடியாமல் சித்ரா தவித்தார். சாத்தூரில் பலமணி நேரமாக காத்திருந்த சித்ரா, அந்த வாலிபர் தன்னை ஏமாற்றி நகை, இருசக்கர வாகனம் மற்றும் செல்போனுடன் சென்றதை அறிந்தார்.

பின்னர் வேறு வழியில்லாமல் அங்கு நின்ற முதியவர் ஒருவரிடம் பணம் வாங்கிக்கொண்டு பஸ்சில் தனது ஊருக்கு சென்றார். அங்கு சென்று அந்த வாலிபர் அணிவித்த நகையை சோதனை செய்தபோது அது கவரிங் நகை என்பது தெரியவந்தது.

திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி தனது நகை, இருசக்கர வாகனம், செல்போன் உள்ளிட்டவைகளை பறி கொடுத்தது குறித்து சாத்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் சித்ரா புகார் செய்தார்.

தன்னிடம் நூதன மோசடி செய்த வாலிபர் பெயர், ஊர், முகவரி உள்ளிட்ட எந்த விவரமும் சித்ராவுக்கு தெரியவில்லை. இதனால் சித்ராவை ஏமாற்றிய வாலிபர் யார்? என்று போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Full View


Tags:    

Similar News