கடன் பெற்ற பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து அனுப்பிய மோசடி கும்பல்... வாலிபர் கைது
- செயலி மூலம் கடனாக பெற்ற பணத்தை பல மடங்கு கூடுதலாக வட்டியுடன் சேர்த்து கட்ட வேண்டுமென வற்புறுத்தியுள்ளனர்.
- போலீசார் விசாரணையில் சமந்தப்பட்ட நபர் பீகார் மாநிலத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூரில் 3 வயது குழந்தையின் படத்தை மார்பிங் செய்து அனுப்பிய லோன் செயலி மூலம் மோசடி செய்யும் கும்பலை சேர்ந்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
திருப்பூரை சேர்ந்த வாலிபர் ஒருவர் செல்போன் மூலம் வரும் லோன் செயலி மூலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு லோன் பெற்றுள்ளார். இந்நிலையில் இந்த வாலிபர் குறிப்பிட்ட தேதிக்குள் பெற்ற பணத்தை திரும்ப கட்ட முடியாத சூழல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அந்த செயலியை சேர்ந்த நபர் வேறு நாட்டின் செல்போன் எண் கொண்ட ஒரு எண்ணில் அந்த வாலிபரை தொடர்பு கொண்டுள்ளனர். தொடர்பு கொண்ட நபர் செயலி மூலம் கடனாக பெற்ற பணத்தை பல மடங்கு கூடுதலாக வட்டியுடன் சேர்த்து கட்ட வேண்டுமென வற்புறுத்தியுள்ளனர்.
அந்த வாலிபர் பணத்தை கட்ட தாமதமாகிவிட்டது. அதனால் கும்பலை சேர்ந்த நபர், லோன் பெற்ற வாலிபருடைய, நண்பரின் 3 வயது குழந்தையை ஆபாசமாக சித்தரித்து வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து மாநகர சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு உத்தரவின் பேரில், துணை கமிஷனர் வனிதா வழிகாட்டுதலின் படி, இன்ஸ்பெக்டர் சொர்ணவள்ளி மேற்பார்வையில் சைபர் கிரைம் எஸ்.ஐ சையது ரபீக் சிக்கந்தர் தலைமையில் போலீசார் நவீன்கிருஷ்ணன், கருணாசாகர், ஆறுமுகம், விஸ்வா ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு சம்பவம் குறித்து விசாரித்து வந்தனர்.
போலீசார் விசாரணையில் சமந்தப்பட்ட நபர் பீகார் மாநிலத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து தனிப்படை போலீசார் பீகார் விரைந்தனர். பீகார் மாநிலம், மதுபானி பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் பதுங்கியிருந்தார். அங்கு சென்று அந்த வாலிபரை போலீசார் கையும் களவுமாக பிடித்து விசாரித்தனர். போலீசார் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அந்த வாலிபர் அரியானாவை சேர்ந்த ராம் சேவாக் கமட் என்பவரின் மகன் ரோசன்குமார் கமட் (22) என்பதும், அவர் லோன் செயலி மூலம் கடன் கொடுத்து விட்டு பலரின் புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை சேர்ந்தவர் என்பதும், அவருக்கு மேல் பலர் குழுக்களாக இருப்பதும் தெரியவந்தது.
தொடர்ந்து திருப்பூரை சேர்ந்த 3 வயது குழந்தையின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து அனுப்பியதும் ஒப்புக்கொண்டார். இதே போல் திருப்பூரில் செல்போன் செயலின் மூலம் கடன் பெற்ற பெண்களின் புகைப்படங்களையும் ஆபாசமாக சித்தரித்து அனுப்பி பணம் பறித்து மோசடி செய்ததும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து தனிப்படை போலீசார் ரோசன்குமார் கமட்டை திருப்பூர் அழைத்து வந்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். பீகார் சென்று கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு பாராட்டினார்.