இளம்பெண்ணின் திருமணத்தை தடுத்து நிறுத்திய வாலிபர் கைது
- பெண்ணிற்கு அவரது பெற்றோர் வேறொரு மாப்பிள்ளையை பார்த்து நிச்சயித்தனர்.
- திருமணத்திற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வந்தது.
பல்லடம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மேட்டுப்பட்டியை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் தரணிதரன்(வயது 29). இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அம்மாபாளையம் பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் தங்கி பணிபுரிந்து வந்தார்.
அப்போது அங்கு பணிபுரிந்த இளம்பெண்ணுக்கும் தரணிதரனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இருவரும் நெருங்கி பழகி வந்தனர். இந்தநிலையில் பழகிய சில நாட்களில் தரணிதரனின் நடவடிக்கைகள் பிடிக்காததால் அந்த பெண் தரணிதரனிடம் பேசுவதை நிறுத்தி விட்டார்.
மேலும் அந்த பெண்ணிற்கு அவரது பெற்றோர் வேறொரு மாப்பிள்ளையை பார்த்து நிச்சயித்தனர். திருமணத்திற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வந்தது.
இதையறிந்த தரணிதரன், தனது காதலியை தொடர்பு கொண்டு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். இல்லாவிட்டால் 2பேரும் சேர்ந்து இருந்த புகைப்படங்களை மாப்பிள்ளைக்கு அனுப்பி வைத்து விடுவேன் என்று மிரட்டியதுடன், அந்த புகைப்படங்களை காதலிக்கு பார்த்திருந்த மாப்பிள்ளையின் செல்போனுக்கு அனுப்பினார். இதனால் அந்த பெண்ணின் திருமணம் தடைப்பட்டது.
மேலும் காதலியை தொடர்பு கொண்ட தரணிதரன் ரூ.3 லட்சம் பணம் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நாம் இருவரும் சேர்ந்திருந்த படங்களை இணைய தளத்தில் வெளியிடுவேன் என மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன அந்தப்பெண் அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
உடனே இது குறித்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி தரணிதரனை கைது செய்தனர். தொடர்ந்து அவர் இது போல் வேறு பெண்களை ஏமாற்றியுள்ளாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.