தஞ்சை ரெயில்வே கீழ் பாலத்தில் தண்ணீர் நிரம்பி போக்குவரத்து பாதிப்பு
- தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற ராட்சத மோட்டார் ஒன்று வைக்கப்பட்டது.
- கனமழை காரணமாக கீழ் பாலம் தண்ணீர் தேங்கி இந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ரெயிலடி , கான்வென்ட், ராமநாதன் ரவுண்டானா வழியாக புதிய பஸ் நிலையம் வந்து செல்லும் பஸ்களும், அதிக அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு , தனியார் அலுவலகங்களில் பணி புரிபவர்கள் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினமும் பயணிக்கின்ற இந்த வழியில் ரெயில்வே கீழ் பாலம் அமைந்துள்ளது.
ஆனால் மழை பெய்யும் நேரங்களில் இந்த ரெயில்வே கீழ் பாலத்தில் தண்ணீர் தேங்கி வெளியேற முடியாமல் தேங்குகிறது.
போதிய வடிகால் வசதி இல்லாததால் தண்ணீர் வடிந்து வெளியே செல்ல வழி இல்லாததால் போக்குவரத்து பாதிப்பு அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.
மழை நேரங்களில் தண்ணீர் தேங்கா வண்ணம் இருக்க நடவடிக்கை எடுக்க ஏ.ஐ.டி.யூ.சி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது.
பின்னர் ரெயில்வே கீழ்பாலத்தில் தண்ணீர் தேங்காமல் வெளிவதற்கு வடிகால்கள் ஓரளவு சரி செய்யப்பட்டு, தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற ராட்சத மோட்டார் ஒன்று வைக்கப்பட்டது.
ஆனால் நிரந்தரமாக தண்ணீர் வெளியேறுவதற்கு எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
நேற்று மாலை திடீரென பெய்த கன மழை காரணமாக கீழ் பாலம் தண்ணீர் தேங்கி, வெளியேற முடியாமல் நிரம்பியதால் இந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால் ரெயிலடி, கான்வென்ட், ராமநாதன் வழியாக பழைய பஸ் நிலையத்திலிருந்து , புதிய பஸ் நிலையம் செல்பவர்களும், வருபவர்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள்.
வருங்காலத்தில் இந்த மாதிரி நிலைமைகளை தவிர்த்திட, மழைக்காலம் வருவதற்கு முன்னர் நிரந்தரமாக ரெயில்வே கீழ்பாலத்தில் தண்ணீர் தேங்காமல் வெளியேறுவதற்குரிய பணிகளை விரைவாக செய்து முடித்து தர வேண்டும் என்று ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.