தொழில் முனைவோரில் தலைசிறந்த மாவட்டமாக தஞ்சை திகழ வேண்டும்- கலெக்டர் பேச்சு
- கபிஸ்தலம் ஊராட்சியில் 100 சதவீத வரிவசூல் செய்யப்பட்டிருப்பதை பாராட்டினார்.
- அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் நெற்களம் அமைக்கும் பணிகள் ஆய்வு.
கபிஸ்தலம்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கபிஸ்தலம் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வருகை தந்தார். அவரை ஊராட்சி மன்ற தலைவர் சுமதி குணசேகரன் சால்வை அணிவித்து வரவேற்றார்.
பின்னர் ஊராட்சி பதிவேடுகளை ஆய்வு செய்து பார்வையிட்டு அதனை தொடர்ந்து பி.எல். எப், மற்றும் சுய உதவி குழுக்கள், சுயதொழில் செய்பவர்கள் ஆகியவுடன் கலந்து ஆலோசனை நடத்தினார்.
அப்பொழுது சுயதொழில் செய்யும் நபர்களை அழைத்து அவர்கள் செய்த மண்பாண்டங்கள், அகல் விளக்குகள், ஆகியவற்றை பார்வையிட்டு சிறப்பாக செய்துள்ளதாக அவர்களை ஊக்குவித்து தொழில் முனைவோரில் தஞ்சை மாவட்டம் தலைசிறந்த மாவட்டமாக திகழ வேண்டும் என அவர்கள் மத்தியில் உரையாற்றினார். அதனை தொடர்ந்து கபிஸ்தலம் ஊராட்சியில் 100 சதவீதம் வரி வசூல் செய்யப்பட்டிருப்பதை பாராட்டி நல்ல முறையில் செயல்பட்டு கொண்டுள்ள இந்த ஊராட்சி மேலும் சிறப்பாக செயல்பட வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
ஊராட்சியில் தனியார் வசமுள்ள குளங்களை ஊராட்சி நிர்வாகத்திற்கு கீழ் கொண்டு வந்தால் ஊராட்சிக்கு வருமானத்தை பெருக்க வழிவகை செய்ய முடியும் என ஊராட்சி மன்ற தலைவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க குளங்களை பராமரித்து வரும் தனியாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அதன் பிறகு முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து சோமேஸ்வரபுரம் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சிமெண்ட் சாலை பணி, மற்றும் நெற்களம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்து விரைவில் பணிகளை முடிக்க அறிவுறுத்தினார்.
இந்த ஆயுள் போது பாபநாசம் தாசில்தார் பூங்கொடி, ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் சிவகுமார், ஆனந்தராஜ், வட்டார துணை வளர்ச்சி அலுவலர் கண்ணன், ஒன்றிய பொறியாளர்கள் சாமிநாதன், சரவணன், வருவாய் ஆய்வாளர் சுகுணா, கிராம நிர்வாக அலுவலர் சிவப்பிரகாசம், ஊராட்சி மன்ற தலைவர் சுமதி குணசேகரன், ஊராட்சி செயலாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் அரசு அலுவலர்கள், ஊராட்சி பணியாளர்கள், சுய உதவி குழுவினர் உள்பட பலர் உடன் இருந்தனர்.