ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1, 2 விண்ணப்பங்களை திருத்த அவகாசம்
- ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் மாதம் 7-ந்தேதி வெளியிட்டது.
- இதையடுத்து இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கால அவகாசம் கடந்த ஏப்ரல் மாதம் 26-ந்தேதி வரை வழங்கப்பட்டது.
சேலம்:
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1, தாள்-2 2022-ம் ஆண்டு அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் மாதம் 7-ந்தேதி வெளியிட்டது. இதையடுத்து இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கால அவகாசம் கடந்த ஏப்ரல் மாதம் 26-ந்தேதி வரை வழங்கப்பட்டது.
சேலம், நாமக்கல்
இதில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் வசிக்கும் ஆசியர் பட்டயபடிப்பு, ஆசிரியர் பட்டப்படிப்பு படித்தவர்கள் உள்பட தமிழகம் முழுவதிலும் இருந்து தாள்-1- க்கு 230878 பேரும், தாள்-2-க்கு 401886 பேரும் என மொத்தமாக 632764 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த நிலையில் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள பல கோரிக்கை மனுக்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்பினர். எனவே இந்த கோரிக்கையினை ஏற்று தாள்-1, தாள்-2 -க்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் கால அவகாசம் வழங்கி உள்ளது.
அதன்படி 24.07.2022 முதல் 27.07.2022 வரை திருத்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி
விண்ணப்பதாரர்கள் செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் கல்வித்தகுதி ஆகியவற்றில் மாற்றங்கள் செய்ய இயலாது. விண்ணப்பபடிவத்தில் மாற்றங்களை செய்து விண்ணப்பத்தை சமர்ப்பித்த பின் அதில் மேலும் மாற்றங்களை செய்யக்கூடாது.
மேலும் இனிவரும் காலங்களில் திருத்தம் தொடர்பாக எவ்வித கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்படமாட்டாது. இந்த தகவலை ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.