ஆசிரியர் தகுதி தேர்வு வினாத்தாளில் தவறுகள்- தேர்வு எழுதியவர்கள் குற்றச்சாட்டு
- ஆசிரியர்களாக பணிபுரிய நடத்தப்படும் தகுதி தேர்வான டெட் தேர்வை எழுத 4 லட்சத்து 1,886 பேர் பதிவு செய்து இருந்தனர்.
- வினாத்தாள் தொடர்பாக ஆட்சேபம் தெரிவித்து தேர்வு எழுதியவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் முறையிட்டுள்ளனர்.
சென்னை:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை வகுப்பு எடுப்பதற்கான ஆசிரியர் பணியில் சேர்வதற்கு ஆசிரியர் தகுதி தேர்வு 2-ம் தாளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும்.
அந்த வகையில் ஆசிரியர்களாக பணிபுரிய நடத்தப்படும் தகுதி தேர்வான டெட் தேர்வை எழுத 4 லட்சத்து 1,886 பேர் பதிவு செய்து இருந்தனர். பிப்ரவரி 3-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை டெட் 2-ம் தாள் தேர்வு ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டது.
கடந்த 28-ந் தேதி தேர்வு முடிவு வெளியானது. 2 லட்சத்து 54 அயிரம் பேர் தேர்வு எழுதியதில் 15,406 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 6 சதவீதமே தேர்ச்சி இருந்தது.
தேர்ச்சி குறைந்ததற்கு வினாத்தாளில் உள்ள பிழைகள், தவறுகள் பாட வாரியாக மதிப்பெண் நிர்ணயித்ததில் குளறுபடி உள்ளிட்டவையே காரணம் என்று தேர்வு எழுதியவர்கள் குற்றம்சாட்டினர்.
இந்த தவறுகளால் தேர்வு எழுதிய ஆயிரக்கணக்கானவர்களால் 82 மதிப்பெண்களை பெற முடியவில்லை.
வினாத்தாள் தொடர்பாக ஆட்சேபம் தெரிவித்து தேர்வு எழுதியவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் முறையிட்டுள்ளனர். 3,341 விண்ணப்பதாரர்களிடம் இருந்து 16,409 ஆட்சேபனைகளை ஆசிரியர் தேர்வு வாரியம் பெற்று உள்ளது.
டெட் தேர்வில் நடந்த குளறுபடியில் தேர்ச்சி சதவீதம் குறைந்ததால் அதற்கு தீர்வாக கட்-ஆப் மதிப்பெண் நிர்ணயிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.