வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி போதைப்பொருளாக விற்பனை செய்த வாலிபர் கைது
- சற்குண பாண்டியனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 200 வலி நிவாரண மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர்.
- ஒரு மாத்திரையை ரூ. 35க்கு வாங்கி அதனை 10 மடங்கு அதிகமாக ரூ.350 வரை விற்பனை செய்துள்ளார்.
திருப்பூர்:
திருப்பூரில் வலி நிவாரண மாத்திரைகளை போதைப் பொருளாக பயன்படுத்துவதாக தொடர்ந்து போலீசாருக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபிநபு உத்தரவு பேரில் காவல்துறையினர் மருந்து கடைகளில் ஆய்வு நடத்தினர். மருத்துவர்களின் பரிந்துரை கடிதம் இல்லாமல் வலி நிவாரண மாத்திரைகளை விற்கக் கூடாது என உரிமையாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கியிருந்தனர்.
இந்நிலையில் வீரபாண்டி பகுதியில் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த சற்குணப்பாண்டியன் ( வயது 27 ) என்பவர் ஆன்லைன் மூலமாக மொத்தமாக நிவாரண மாத்திரைகளை வாங்குவது போலீசாருக்கு தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் உதவி இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் தலைமையிலான போலீசார் சற்குண பாண்டியனை தொடர்ந்து நோட்டமிட்டு வந்தனர்.
அப்போது வீரபாண்டி அருகே கொரியரில் வந்த 200 வலி நிவாரண மாத்திரைகளை சற்குணபாண்டியன் பெற்ற போது வடக்கு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர். அவர் வலி நிவாரண மாத்திரைகளை ஆன்லைன் மூலம் வாங்கி தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு போதை ஏற்றுவதற்காக வழங்கியது விசாரணையில் தெரிய வந்தது இதனை தொடர்ந்து சற்குண பாண்டியனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 200 வலி நிவாரண மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து விசாரணை நடத்தியபோது அவர் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக ஆன்லைனில் வலி நிவாரண மாத்திரைகளை ஆர்டர் செய்து தொழிலாளர்கள் மற்றும் நண்பர்களுக்கு விற்பனை செய்துள்ளார். ஒரு மாத்திரையை ரூ. 35க்கு வாங்கி அதனை 10 மடங்கு அதிகமாக ரூ.350 வரை விற்பனை செய்துள்ளார்.