உள்ளூர் செய்திகள்

போதை மாத்திரைகளை கல்லூரி மாணவர்களுக்கு விற்ற வாலிபர் கைது

Published On 2022-07-21 09:33 GMT   |   Update On 2022-07-21 09:33 GMT
  • ஆன்லைன் மூலம் வாங்கினார்
  • 170 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கோவை:

கோவை ரேஸ்கோர்சில் உள்ள தனியார் கல்லூரி அருகே கல்லூரி மாணவர்களுக்கு வாலிபர் ஒருவர் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ரகசிய தகவல் வந்தது.

இதனையடுத்து ரேஸ்கோர்ஸ் சப்-இன்ஸ்பெக்டர் சைனபா தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 170 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் தெலுங்குபாளையம் எல்.ஐ.சி. காலனியை சேர்ந்த ரோகித் (வயது 24) என்பது தெரிய வந்தது.

மேலும் போதை மாத்திரை பழக்கத்துக்கு அடிமையான இவர் ஆன்லைன் மூலம் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து குறைந்த விலைக்கு வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி அதனை போதைக்காக பயன்படுத்தியதும், மேலும் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். தலைமைவாக உள்ள விஜயகுமார் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:-கோவையில் தற்போது இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இடையே போதை ஊசி செலுத்தும் பழக்கம் அதிகரித்து வருகிறது. யாரும் இதனை கண்டுபிடிக்க முடியாது போதை கிடைக்கும் என்பதால் இதனை மாணவர்கள், இளைஞர்கள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு போதை ஊசி செலுத்திய மாணவர் இறந்தார். இதனை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மருந்து கடடைகளில் டாக்டர்களின் பரிந்துரை கடிதம் இல்லாமல் மருந்துகள் வாங்க முடியாது. ஆனால் தற்போது மாணவர்கள் ஆன்லைன் மூலம் போதை மாத்திரைகளை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். எனவே ஆன்லைனில் டாக்டர்களின் பரிந்துரை இல்லாமல் மருந்துகளை விற்பனை செய்ய கூடாது என அரசு சட்டம் இயற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News