உள்ளூர் செய்திகள்

வங்கி லாக்கரில் சொத்து பத்திரத்தை அரித்த கரையான்: ரூ.1.60 லட்சம் நஷ்டஈடு

Published On 2024-05-08 06:38 GMT   |   Update On 2024-05-08 06:38 GMT
  • விசாரணையில் பாதுகாப்பு குறைபாடு உறுதி செய்யப்பட்டது.
  • ரூ.1.60 லட்சம் வங்கி வழங்க குறைதீர்வு ஆணையம் தீர்ப்பு.

புதுச்சேரி:

புதுவை அரியாங் குப்பத்தை சேர்ந்தவர் ஜனார்த்தனன். அதே பகுதியில் இயங்கி வரும் புதுவை மாநில கூட்டுறவு வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தார்.

அந்த வங்கியில் பாதுகாப்பு பெட்டக வசதி சேவையை பணம் செலுத்தி பெற்றிருந்தார். அந்த பெட்டகத்தில் தனக்கு சொந்தமான சொத்துக் களின் 3 அசல் பத்திரம் வைத்திருந்தார். 2016-ல் அதை எடுக்க சென்றபோது கரையான் அரித்து சேதமடைந்திருந்தது.

இதுகுறித்து வங்கி அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இதனால் சேவை குறைபாடு ஏற்பட்டதால் நஷ்டஈடு கோரி புதுவை மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆணைய தலைவர் முத்துவேல் மற்றும் உறுப்பினர்கள் கவிதா, ஆறுமுகம் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது.

விசாரணையில் பாதுகாப்பு குறைபாடு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஜனார்த்தனனுக்கு சேவை குறைபாடுக்கு ரூ.1 லட்சம் நஷ்டஈடு, மன உளைச்சலுக்கு ரூ.50 ஆயிரம், வழக்கு செலவுக்கு ரூ.10 ஆயிரம் என ரூ.1. 60 லட்சம் வங்கி வழங்க வேண்டும் என குறைதீர்வு ஆணையம் தீர்ப்பளித்தது.

Tags:    

Similar News