9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு பாடப்புத்தகங்கள் விற்பனை தொடங்கியது
- அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்படும் இலவச புத்தகங்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
- 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் இன்னும் 3 வாரங்களில் அச்சிடப்படும்.
சென்னை:
தமிழ்நாடு பாட நூல் மற்றும் கல்விப் பணிகள் கழகம் 2023-24-ம் கல்வியாண்டுக்கான 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக 2 கோடிக்கும் அதிகமான புத்தகங்களை அச்சிட்டுள்ளது.
இந்த புத்தகங்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள. டி.பி.ஐ. வளாகம், அடையாறு அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள பாட நூல் கழக கிடங்கு ஆகிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த பாடப்புத்தகங்கள் விற்பனை தொடங்கி உள்ளது.
இந்த புத்தகங்களை பெற தனியார் பள்ளிகள் ஆன்லைனில் பணம் செலுத்திய பிறகு இந்த பாடப் புத்தகங்களை பெற்றுக்கொள்ளலாம். புத்தகங்களை வினியோகம் செய்ய டி.ஜி.பி. வளாகத்தில் 4 கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.
அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்படும் இலவச புத்தகங்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அவை பள்ளிகளுக்கு வழங்கப்படும்.
தமிழ்நாடு பாட நூல் கழகம் மொத்தம் 5 கோடி பாடப் புத்தகங்களை அச்சடித்துள்ளது. இதில் 3.75 கோடி புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. 1.25 கோடி புத்தகங்கள் தனியார் பள்ளிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் இன்னும் 3 வாரங்களில் அச்சிடப்படும். பள்ளிகள் திறக்கப்படும் நாளில் அவை மாணவர்களுக்கு வழங்கப்படும்.
மேலும் மாணவர்களுக்கான பைகள், காலணிகள், சாக்ஸ் வினியோகமும் தொடங்கியுள்ளது. கலர் பென்சில்கள், கிரேயான்கள், ஜியோ மெட்ரிபாக்ஸ் ஆகியவை கொள்முதல் செய்யப்பட்டு வரும் ஜூன் மாதத்திற்கு முன்பு வழங்கப்படும்.
9-ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் முதல் பாடம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றி 'செம்மொழியான தமிழ்மொழியாம்" என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ளது.