உள்ளூர் செய்திகள்

பாளை ஆயுதப்படை மைதானத்தில் துப்பாக்கியுடன் ஒத்திகையில் ஈடுபட்ட பெண் போலீசார்.

நாளை மறுநாள் குடியரசு தினவிழா-வ.உ.சி. மைதானத்தில் மழைநீர் தேங்கியதால் அணிவகுப்பு ஒத்திகை ஆயுதப்படைக்கு மாற்றம்

Published On 2023-01-24 09:51 GMT   |   Update On 2023-01-24 09:51 GMT
  • நெல்லை மாவட்டத்தில் குடியரசு தின விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.
  • குடியரசு தின விழாவின் போது வ.உ.சி. மைதானம் திருவிழா போல் காட்சியளிக்கும்.

நெல்லை:

நாடு முழுவதும் குடியரசு தினவிழா நாளை மறுநாள்(வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நெல்லை மாவட்டத்தில் குடியரசு தின விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.

நெல்லை

நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளை வ.உ.சி. மைதானத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம் நடைபெற உள்ளது. அங்கு கலெக்டர் விஷ்ணு தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்த உள்ளார். அன்றைய தினம் பள்ளி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி, பாரம்பரிய இசை வாத்தியங்கள் முழக்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

மேலும் சுதந்திரத்திற்காக பாடுபட்ட விடுதலை போராட்ட தியாகிகளை கவுரவித்து நலத்திட்ட உதவிகள், மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு சான்றி தழ்கள் உள்ளிட்டவைகளை கலெக்டர் விஷ்ணு வழங்கி, அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொள்கிறார்.

பரப்பளவு சுருங்கிவிட்டது

இதற்காக பாளை வ.உ.சி. மைதானம் தயார்படுத்தப்பட்டு வருகிறது. முந்தைய காலங்களில் சுதந்திர தினம், குடியரசு தின விழாக்கள் நடைபெறும் போது வ.உ.சி. மைதானம் திருவிழா போல் காட்சியளிக்கும். அங்கு நெல்லை மாவட்டம் முழுவதிலும் இருந்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் திரண்டு வருவார்கள். வ.உ.சி. மைதானம் முழுவதும் நிரம்பி பார்ப்பதற்கே அழகாக இருக்கும்.

ஆனால் சமீபத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நவீன கேலரிகளுடன் மைதானம் அமைக்கப்பட்டு அதன் பரப்பளவு சுருங்கிவிட்டது. இதனால் தற்போது குறைந்த அளவு மக்களே அங்கு அமர முடியும். அதேபோல் மைதானத்தில் அணிவகுப்பு ஒத்திகை நடத்துவதற்கும் மிகவும் சிரமமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

மைதானத்திற்குள் மழைநீர்

இந்நிலையில் இந்த ஆண்டு வழக்கம்போல் அங்கு குடியரசு தினவிழா நடைபெறுகிறது. அங்கு கடந்த 2 நாட்களாக அணிவகுப்பு ஒத்திகை நடந்து வந்த நிலையில், நேற்று பெய்த திடீர் மழையால் மைதானத்திற்குள் தண்ணீர் தேங்கி சகதியாக காட்சியளித்தது.

இதனால் இன்று அங்கு நடைபெற இருந்த அணிவகுப்பு ஒத்திகை பாளை ஆயுதப்படை மைதானத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு அங்கு நடைபெற்றது. இதற்கிடையே மைதானத்தில் மழை நீர் தேங்காவண்ணம் மணல் கொண்டு சமன்படுத்தும் பணியானது இன்று ஆர்.டி.ஓ. சந்திரசேகர் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது.

அங்கு மாநகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையில் போலீசார் குடியரசு தினவிழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதற்கிடையே நாளை மறுநாள் கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதற்கு பள்ளி மாணவ-மாணவிகளின் ஒத்திகை அந்தந்த பள்ளிகளில் நடைபெற்று வருகிறது.


பாளை வ.உ.சி. மைதானத்தில் சமன்படுத்தும் பணியை ஆர்.டி.ஓ. சந்திரசேகர் பார்வையிட்ட காட்சி.


 


Tags:    

Similar News