சிதம்பரம் அருகே ஓடும் ஆம்னி பஸ்சில் மயங்கி விழுந்த டிரைவர் திடீர் சாவு
- 48 சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு தமிழகத்திற்கு வந்தார்.
- ஆம்னி பஸ்சின் டிரைவர் ஸ்டியரிங்கின் மீது சாய்ந்து விழுந்தார்.
கடலூர்:
கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷிபுராஜ் (வயது 42). இவர் சுற்றுலா ஆம்னி பஸ்சின் டிரைவராக உள்ளார். இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் கர்நாடகா மாநிலம் ராஜ்நகர் மாவட்டம், கொல்லேகால் பகுதியில் இருந்து 48 சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு தமிழகத்திற்கு வந்தார். தமிழகத்தில் உள்ள சென்னை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாப் பகுதிகள் மற்றும் கோவில்களை சுற்றுலாப் பயணிகளுக்கு சுற்றிக் காட்டினார். அதனைத் தொடர்ந்து நேற்று காலை மேல்மருத்துவர் கோவிலில் சாமிதரிசனம் செய்து விட்டு புதுச்சேரிக்கு வந்தனர்.
புதுச்சேரியில் தங்கிவிட்டு இன்று அதிகாலை ஆம்னி பஸ்சினை எடுத்துக் ெகாண்டு காலை 6 மணியளவில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய 48 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு ஆம்னி பஸ்சினை ஓட்டியபடி வந்தார். அப்போது வடக்கு ரத வீதியில் வரும் போது அவருக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பயணி களை உஷார்படுத்திய அவர், ஆம்னி பஸ்சினை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு பயணிகளை பஸ்சை விட்டு இறங்க வலியுறுத்தினார். இதனால் அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணிகள் பஸ்சின் முன்பக்கம் சென்று பார்த்த போது, ஆம்னி பஸ்சின் டிரைவர் ஸ்டியரிங்கின் மீது சாய்ந்து விழுந்தார்.
உடனடியாக அவரை மீட்ட சுற்றுலா பயணிகள் அக்கம் பக்கம் இருந்தவர்களின் உதவியுடன் சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிதம்பரம் நகர போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட போதும் புத்திசாலித்தனமாக ஆம்னி பஸ்சினை சாலையோரம் நிறுத்திவிட்டு, டிரைவர் இறந்து போன சம்பவம் சுற்றுலா பயணிகள் மத்தியில் சோகத்தையும், சிதம்பரம் மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியையும் ஏற்ப்படுத்தியுள்ளது.