சிவகிரி மலை பகுதியில் பற்றிய தீ கட்டுக்குள் வந்தது
- காற்றின் வேகத்தால் தீ வேகமாக அப்பகுதி முழுவதும் பரவியது.
- காட்டுத் தீயில் அரியவகை மூலிகைகள், தாவரங்கள் எரிந்து இருக்கலாம் என தெரிகிறது.
சிவகிரி:
சிவகிரி மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் உள்ள கோம்பை ஆறு பீட்டிற்கும், சிவகிரி பீட்டிற்கும் இடையே வனப்பகுதிகளில் நேற்று அதிகாலை திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. காற்றின் வேகத்தால் தீ வேகமாக அப்பகுதி முழுவதும் பரவியது. இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் டாக்டர் முருகனுக்கு வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர்.
மாவட்ட வன அலுவலர் டாக்டர் முருகன் உத்தரவின் பேரில் சிவகிரி ரேஞ்சர் மவுனிகா, வனவர்கள் அசோக்குமார், அசோக் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள், தன்னார்வலர்கள் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கோம்பை ஆறு பீட் பகுதியிலும், சிவகிரி பீட் பகுதியிலும் முற்றிலுமாக அணைக்கப்பட்டதாகவும், காற்றின் வேகத்தில் இரண்டிற்கும் மேலே உள்ள உள்ளார் பீட்டில் பகுதியில் கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைப்பதற்கு வனத்துறையினர் 2 குழுக்களாக பிரிந்து இலை தழைகளை கொண்டு அணைத்து வருவதாகவும், இன்று வியாழக்கிழமை எரியும் தீயை முழுமையாக அணைக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
காற்றின் வேகம் காரணமாக தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் போராடினர். இந்நிலையில் இன்று அதிகாலை தீ கட்டுக்குள் கொண்டு வந்தனர். காட்டுத் தீயில் அரியவகை மூலிகைகள் மற்றும் தாவரங்கள் எரிந்து இருக்கலாம் என தெரிகிறது. வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் சிவகிரி அடிவாரப் பகுதிகளில் வேளாண்மை செய்யப்பட்டுள்ள பயிர்களில் சாம்பல்கள் படிந்து காணப்படுகிறது.