அன்னூரில் தொழில் பூங்கா அமைக்கும் திட்டத்தை அரசு கைவிடவேண்டும்
- எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
- பவானி ஆற்றின் உயிரோடு விளையாடும் இந்த தொழில்பேட்டை திட்டங்களை ரத்து செய்ய வேண்டும்.
கோவை
எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்டம் அன்னூர், மேட்டுப்பாளையம் போன்ற பகுதிகளில் தொழில் பூங்கா அமைப்பதற்கு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதனால் விவசாயமும், விவசாயிகளும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
தொழில் பூங்காவை கடந்த ஆட்சியில் அமைப்பதற்கு ஆரம்ப கட்ட பணிகளை மேற்கொண்டபோது விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். மேலும் பவானி ஆற்றின் உயிரோடு விளையாடும் இந்த தொழில்பேட்டை திட்டங்களை ரத்து செய்ய வேண்டும். இதுவே ஒட்டுமொத்த கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்ட மக்களின் ஒற்றைக் கோரிக்கையாக உள்ளது. கொங்கு மண்டலத்தில் சிறு, குறு தொழில் வளர்ச்சி நன்றாக உள்ளது. எனவே தொழில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள மாவட்டங்கள், வேலைவாய்ப்பு தேவைப்படும் மாவட்டங்களில் இது போன்ற திட்டங்களை கொண்டு வரலாம். எனவே அன்னூர் பகுதியில் இந்த தொழில் பூங்காவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது