பரம்பிக்குளம் அணையில் மதகு பொருத்தும் பணி நிறைவு
- சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
- தண்ணீர் தேக்கும் வகையில் மதகு தயாராக உள்ளது.
பொள்ளாச்சி,
பரம்பிக்குளம்-ஆழியாறு எனும் பி.ஏ.பி திட்டத்தில் மேல் நீராறு, கீழ் நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம், ஆழியாறு, அப்பர் ஆழியாறு, திருமூர்த்தி என 9 அணைகள் உள்ளன.
இதில் பரம்பிக்குளம் அணை திட்டத்தில் உள்ள தொகுப்பு பி.ஏ.பி அணைகளில் அதிக கொள்ளளவு கொண்டது. 17 டி.எம்.சி.க்கும் அதிகமாக கொள்ளளவு கொண்ட இந்த அணை ஒருமுறை நிரம்பி விட்டால் ஓர் ஆண்டுக்கு பாசனத்துக்கும், குடிநீருக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது.
பி.ஏ.பி திட்டத்தில் தமிழகத்தில் 4.25 லட்சம் ஏக்கரும், கேரளத்தில் 22 ஆயிரம் ஏக்கரும் பாசன வசதி பெறுகின்றன. இது தவிர தமிழகத்தில் கோவை, திருப்பூர் ஆகிய 2 மாவட்டங்களுக்கும், கேரளத்தில் பாலக்காடு மாவட்டத்துக்கும் குடிநீர் ஆதாரமாக இந்த திட்டம் இருந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 20-ந் தேதி பரம்பிக்குளம் அணையின் மதகு உடைந்ததால் அணையிலிருந்து 6 டி.எம்.சி தண்ணீர் வெளியேறியது. மதகு உடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து தமிழக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் துரை முருகன் நேரில் ஆய்வு செய்து மதகு உடைப்பை சரிசெய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதை அடுத்து ரூ.7.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டு புதிய மதகு அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. தற்போது இந்தப் பணி நிறைவடைந்துள்ளது.புதிதாக பொருத்தப்பட்டுள்ள மதகு 42 அடி அகலமும், 27 அடி உயரமும் கொண்டது. இதன் எடை 42 டன் ஆகும்.
மதகு பொருத்தும் பணி முழுமையாக நிறைவடைந்த நிலையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
இதில் மதகு மேலும், கீழும் இயக்கப்பட்டு சங்கிலிகளின் தன்மையும் சோதிக்கப்பட்டது. தற்போது தண்ணீர் தேக்குவதற்கு தயாராக மதகு பொருத்தப்பட்டுள்ளது.
சோதனை ஓட்டத்தி ன்போது சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.கடந்த சில வாரங்களாக 41 அடிக்கும் கீழ் இருந்த அணையின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 44 அடியாக உயர்ந்துள்ளது. இதற்கு மேல் உயரும் நீர்மட்டம் புதிய மதகில் தடுக்கப்பட்டு தேக்கப்படும்.
இது குறித்து பி.ஏ.பி அதிகாரிகள் கூறும்போது, மதகு பொருத்தும் பணி முழுமையாக நிறைவடைந்துவிட்டது. சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக முடிந்துள்ளது. தற்போது தண்ணீர் தேக்கும் வகையில் மதகு தயாராக உள்ளது என்றனர்.