உள்ளூர் செய்திகள்

கள்ளந்திரி கால்வாயில் மூழ்கி தொழிலாளி பலி

Published On 2023-11-27 09:56 GMT   |   Update On 2023-11-27 09:56 GMT
  • கால்வாயில் தண்ணீர் வேகம் அதிகமாக இருந்தது.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலூர்:

மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஜீவாநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் விக்கி (வயது 35). தச்சு வேலை பார்த்து வரும் இவருக்கு திருமணமாகி ரூபிணிதேவி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

நேற்று விடுமுறை நாள் என்பதால் விக்கி தனது வீட்டின் அருகே உள்ள நண்பர்களுடன் அழகர்கோவில் அருகே உள்ள கள்ளந்திரி பெரியாறு கால்வாயில் குளிக்க சென்றார். வைகை ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கால்வாயில் தண்ணீர் வேகம் அதிகமாக இருந்தது.

இதனை உணராமல் விக்கி மற்றும் நண்பர்கள் கால்வாயில் குளித்தனர். கால்வாயில் நடுப்பகுதிக்கு சென்ற விக்கி நீண்ட நேரமாகியும் வெளியே வர வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் மற்றும் அங்கிருந்த சிலர் கால்வாயில் நீந்தி விக்கியை தேடி பார்த்தனர். ஆனால் எந்த பலனும் இல்லை.

இதுகுறித்து அப்பன் திருப்பதி போலீசாருக்கும், தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் அபி கோவிந்தராஜ், தீயணைப்பு நிலைய அலுவலர் காதர் பாட்சா தலைமையிலான தீயணைப்பு மற்றும் கமாண்டோ படை வீரர்கள் சம்பவ இடம் வந்து விக்கியை தேடினர். ஆனால் அதற்குள் இருட்டிவிட்டதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

இன்று காலை வீரர்கள் தேடும் பணியை தொடங்கினர். அப்போது கள்ளந்திரி கால்வாயில் இருந்து சில மீட்டர் தொலைவில் புதருக்கு இடையே விக்கி உடல் சிக்கி இருந்தது தெரியவந்தது. வீரர்கள் உடலை கைப்பற்றி கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக அப்பன்திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News