- 90 ஆயிரம் புத்தகங்களை பாதுகாப்பாக வெளியே எடுப்பது குறித்து ஆலோசித்தனர்.
- தொடர் மழையால் மாலை நேரத்தில் வாசகர்கள் நூலகத்தில் இல்லை.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் ஒரு வாரத்துக்கு மேலாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் கூடலூர் கிளை நூலக கட்டிடம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. சுமார் 46 ஆண்டுகள் பழமையான கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விடும் நிலையில் உள்ளதாக வாசகர்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்தநிலையில் தொடர் மழையால் நூலகத்துக்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. நேற்று மாலை 5 மணிக்கு நூலகர் கிளமெண்ட், ஊழியர் ஆரோன் ஆகியோர் நூலக பதிவேடுகளை சரிபார்த்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக நூலக கட்டிடத்தின் பெரும்பாலான பகுதி கண்ணிமைக்கும் நேரத்தில் இடிந்து விழுந்தது. இதை கண்ட நூலகர் மற்றும் ஊழியர் அச்சத்தில் வெளியே ஓடிவந்தனர். தொடர்ந்து மழையும் பெய்து கொண்டிருந்ததால் கட்டிடத்தில் இருந்த புத்தகங்கள் நனைந்தது. தகவல் அறிந்த கூடலூர் ஆர்.டி.ஓ. சரவண கண்ணன், தாசில்தார் சித்தராஜ் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் கட்டிடத்துக்குள் சேதமடைந்து உள்ள 90 ஆயிரம் புத்தகங்களை பாதுகாப்பாக வெளியே எடுப்பது குறித்து ஆலோசித்தனர். பின்னர் நூலகத்தில் இருந்த கணினிகள் உள்ளிட்ட பதிவேடுகள் வெளியே எடுக்கப்பட்டு மற்றொரு கட்டிடத்தில் வைக்கப்பட்டது. தொடர்ந்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தீயணைப்பு படையினர் உதவியுடன் இடிபாடுகள் அகற்றப்பட்டது. பின்னர் இடிபாடுகளில் சிக்கி சேதம் அடைந்த புத்தகங்கள் சேகரிக்கப்பட்டு வேறு கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, தொடர் மழையால் மாலை நேரத்தில் வாசகர்கள் நூலகத்தில் இல்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு உள்ளது என்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.