திருநம்பியுடன் சேர்ந்து வாழ்வதற்காக பெற்ற மகன்களை சித்ரவதை செய்த தாய்- பரபரப்பு தகவல்கள்
- கருத்து வேறுபாடு காரணமாக மஞ்சு தனது கணவரை பிரிந்து விட்டார்.
- திருநம்பியான பிரியங்காவுடன் தகாத உறவில் மஞ்சு இருந்து வந்துள்ளார்.
மேட்டுப்பாளையம்:
கோவை குழந்தைகள் நல அலுவலகத்திற்கு நேற்று ஒரு அழைப்பு வந்தது. அதனை அங்கு பணியில் இருந்த குழந்தைகள் நல அலுவலர் பரமேஸ்வரி எடுத்தார்.
அப்போது எதிர்முனையில் பேசிய நபர், காரமடை அடுத்துள்ள தோலம்பாளையம் ஜே.ஜே நகரில் 2 பெண்கள் சேர்ந்து சிறுவர்களை அடித்து துன்புறுத்துவதாகவும், அவர்கள் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்து விட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
இதையடுத்து குழந்தைகள் நல அலுவலர் பரமேஸ்வரி, களப்பணியாளர் ரெபீனா ஆப்பிரிணம் என்பவருடன் தோலம்பாளையம் ஜே.ஜே.நகர் பகுதியில் குறிப்பிட்ட அந்த வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அங்கிருந்த 2 பெண்களும் சேர்ந்து சிறுவர்களை தாக்கியது உறுதியானது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் தெரியவந்தன.
பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் மஞ்சு(வயது25). இவருக்கு ராஜீவ் காந்திநகரை சேர்ந்த ரமேஷ்(30) என்பவருடன் திருமணம் ஆனது. இவர்களுக்கு ராகுல், ரோஷன் என 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மஞ்சு தனது கணவரை பிரிந்து விட்டார். இதையடுத்து அவர் தனது மகன்களுடன் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தாய் கோவிந்தம்மாள் வீட்டிற்கு வந்தார்.
அங்கிருந்தபடி, அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அப்போது அதே நிறுவனத்தில் பணிபுரிந்த திருநம்பியான பிரியங்கா(28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் தகாத உறவாக மாறியது.
இதையடுத்து மஞ்சுவும், பிரியங்காவும் தோலம்பாளையம் பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்தனர். மஞ்சு தான் செல்லும் போது, தனது மகன்களையும் அங்கு அழைத்து சென்றார்.
இந்த நிலையில் இவர்களின் உறவிற்கு சிறுவர்கள் 2 பேரும் இடையூறாக இருப்பதாக மஞ்சுவும், பிரியங்காவும் நினைத்தனர்.
கடந்த 9-ந் தேதி மஞ்சுவும், பிரியங்காவும் சேர்ந்து சிறுவர்களை தகாத வார்த்தைகளால் பேசி கடுமையாக தாக்கியுள்ளனர். கத்தியை காட்டி கொன்று விடுவதாகவும் மிரட்டியதும் விசாரணையில் தெரியவந்தது.
தொடர்ந்து அதிகாரிகள் சிறுவர்கள் 2 பேரையும் பார்த்தனர். அப்போது அவர்களுக்கு முகம், தாடை, கழுத்து, கை, மூக்கு, கால்களில் காயம் ஏற்பட்டிருந்தது. உடனடியாக அவர்கள் 2 பேரையும் மீட்டனர்.
இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் பரமேஸ்வரி மற்றும் ரெபீனா ஆப்பிரிணம் ஆகியோர் சம்பவம் குறித்து காரமடை போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார் திருநம்பி பிரியங்கா மற்றும் சிறுவர்களின் தாய் மஞ்சு ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்டுத்தி கோவை ஜெயிலில் அடைத்தனர்.
திருநம்பியுடன் வாழ்வதற்கு ஆசைப்பட்டு பெற்ற தாயே தனது பிள்ளைகளை அடித்து கொடுமைப்படுத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.