இன்று சிவராத்திரி விழாவை முன்னிட்டு தஞ்சை பூச்சந்தையில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு
- சிவராத்திரியை முன்னிட்டு கோவில்களில் அர்ச்சனை செய்ய, வழிபாடு நடத்த பூக்களின் தேவை அதிகரித்தது.
- பூக்களின் விலையும் நேற்றையை விட அதிகமாகும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் விளார் ரோடு சைலஜா மண்டபத்தில் பூச்சந்தை இயங்கி வருகிறது.
இந்த சந்தைக்கு திண்டுக்கல், ஓசூர், நிலக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். இதேபோல் இங்கிருந்தும் வெளியூர்களுக்கு பூக்கள் அனுப்பி வைக்கப்படும்.
பண்டிகை, திருவிழாக் காலங்கள்,
சுப முகூர்த்த நாட்களில் பூக்கள் விலை கணிசமாக உயரும். அதன்படி இன்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளது. சிவராத்திரியை முன்னிட்டு கோவில்களில் அர்ச்சனை செய்ய, வழிபாடு நடத்த பூக்களின் தேவை அதிகரித்தது.
இதன் காரணமாக தஞ்சை பூச்சந்தையில் இன்று பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. நேற்று 1 கிலோ ரூ.900-க்கு விற்கப்பட்ட முல்லைப் பூ இன்று கிடு கிடுவென உயர்ந்து ரூ.1500-க்கு விற்பனை செய்யப்பட்டது.
நேற்று ரூ.800-க்கு விற்பனையான மல்லிகைப்பூ இன்று ரூ.1000-க்கு விற்கப்பட்டது. இதேபோல் கனகாம்பரம் கிலோ ரூ.1000, ஆப்பிள் ரோஸ் ரூ.200, சம்பங்கி ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த பூக்களின் விலையும் நேற்றையை விட அதிகமாகும்.
இது குறித்து வியாபாரிகள் கூறும்போது:-
சிவராத்திரி என்பதால் இன்று பூக்களின் தேவை அதிகமானது. இதன் காரணமாகவும் தற்போது பனிப்பொழிவால் பூக்களின் விளைச்சல் குறைந்து காணப்படுகிறது.
இந்த காரணங்களால் பூக்களின் தேவை அதிகரித்தது. இருந்தாலும் பொதுமக்கள் அதிகளவில் பூக்கள் வாங்கி செல்கின்றனர் என்றனர்.