பள்ளிக்கு வந்த மாணவர்களை திருப்பிய அனுப்பி கள்ளர் சீரமைப்பினர் போராட்டம்
- வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.
- ஆதரவு கேட்டு கடந்த 2 நாட்களாக பிரசாரம் செய்தனர்.
மேலசொக்கநாதபுரம்:
தமிழ்நாடு கள்ளர் பள்ளிகளின் சீரமைப்பு மற்றும் பெயர் மாற்றம் குறித்து முன்னாள் நீதிபதி சந்துரு தனது அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்தார்.
இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஜாதிப் பெயரை நீக்க வேண்டும். ஆதிதிராவிடர், கள்ளர் சீரமைப்பு உள்ளிட்ட பெயர்களை மாற்ற வேண்டும் என்ற கருத்துக்களை தெரிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழக பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு மற்றும் பார்வர்டு பிளாக் கட்சியினர் இன்று மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.
இதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடமும், பொதுமக்களிடமும் ஆதரவு கேட்டு கடந்த 2 நாட்களாக பிரசாரம் செய்தனர்.
இன்று தேனி மாவட்டத்தில் உள்ள கள்ளர் பள்ளிகளை பூட்டி அவர்கள் போராட்டம் நடத்தினர். தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வருவதற்கு முன்பாகவே பள்ளிக்கு விடுமுறை என கூறி வந்த மாணவர்களையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இதனால் தங்களுக்கு பள்ளி விடுமுறை என நினைத்து மாணவர்கள் உற்சாகமாக திரும்பினர். அதன்பிறகு கள்ளர் பள்ளிகளை பெயர்மாற்றம் செய்யும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.