கூடலூரில் ஆட்டோக்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணி தொடங்கியது
- ஒரு ஆட்டோ நிறுத்தப் பகுதியில் இருந்து 15 கி.மீ. தூரம் வரை மட்டுமே இயக்கப்படவேண்டும்.
- ஸ்டிக்கர் ஒட்டுவதன்மூலம், வெளியூா் ஆட்டோக்களை எளிதில் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க முடியும்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், கூடலூரில் குறுகலான சாலைகள் உள்ளன. ஆனால் இங்கு 100-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதனால் கூடலூரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே தேவாலா, பந்தலூரில் உள்ள ஆட்டோக்கள், உரிய அனுமதி இன்றி கூடலூரில் இயக்கப்படுகிறது. இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது என்று உள்ளூர் ஆட்டோ டிரைவர்கள் புகாா் அளித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஒரு ஆட்டோ நிறுத்தப் பகுதியில் இருந்து 15 கி.மீ. தூரம் வரை மட்டுமே இயக்கப்படவேண்டும். ஆனால், தொலை தூரத்தில் இருந்து வந்து, கூடலூா் நகரில் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன என்று குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில் கூடலூா் நகரில் இயக்கப்படும் ஆட்டோக்களை அடையாளம் காணும் வகையில் பிரத்யேக ஸ்டிக்கா் ஒட்டுவது என்று போக்குவரத்து வட்டார அதிகாரிகள் முடிவு செய்தனர். இதன் ஒருபகுதியாக அங்கு இயக்கப்படும் உள்ளூா் ஆட்டோக்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
இதற்கான பணிகளில் கூடலூா் கோட்டாட்சியா் முகமது குதுரத்துல்லா, டி.எஸ்.பி. செல்வராஜ், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் குமாா், போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். கூடலூரில் உள்ளூர் ஆட்டோக்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதன்மூலம், வெளியூா் ஆட்டோக்களை எளிதில் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க முடியும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனா்.