- ரேசன் அரிசி கடத்தல் சம்மந்தமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
- வாகனத்தில் 1000 கிலோ ரேசன் அரிசியை சட்டவிரோதமாக கடத்தி சென்றது தெரிய வந்தது.
தருமபுரி:
உணவுபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார், உத்தரவின் பேரில் கோவை மண்டலம் போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன் மற்றும் போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார், அறிவுறுத்தலின் பேரில் தருமபுரி மாவட்டத்தில் ரேசன் அரிசி கடத்தல் சம்மந்தமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பஞ்சபள்ளி அருகே நல்லம்பட்டி கொல்லபுரி மாரியம்மன் கோவில் எதிரில் கிருஷ்ணகிரி அலகு சப்-இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த சந்தேகத்திற்கு உட்பட்ட கர்நாடகா பதிவெண் கொண்ட ஆம்னி வேன் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த வாகனத்தில் 1000 கிலோ ரேசன் அரிசியை சட்டவிரோதமாக கடத்தி சென்றது தெரிய வந்தது.
அவரிடம் விசாரணை செய்தபோது கர்நாடகா மாநிலம், ராம் நகர் மாவட்டம் கொல்லி கனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த சோமசேகரன் மகன் பிரமோத் (22) என தெரிய வந்தது. மேலும் கடத்தி வரப்பட்ட ரேசன் அரிசியை கர்நாடகா மாநிலம் ராம்நகரில் உள்ள டிபன் கடைகளுக்கு அதிக லாபத்திற்காக விற்பனை செய்ய கடத்தியதும் தெரிய வந்தது. இதனை அடுத்து போலீசார் வழக்கு பதிவுசெய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.