சின்னசேலம் அருகே சூப்பர் மார்க்கெட்டில் நூதன முறையில் திருட்டு
- அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வந்து அரிசி, மளிகை பொருட்கள் வாங்கினார்.
- கடைக்கு வந்த நபர் தன்னை ஏமாற்றி விட்டு சென்றதாக அக்கம்பக்கத்தினர்களிடம் கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் அருகே உள்ள நயினார்பாளையம் கிராமத்தில் ஒரு சிறிய சூப்பர் மார்க்கெட்டை வாசுதேவனூர் கிராமத்தை சேர்ந்த மங்கையர்கரசி (வயது31) என்பவர் நடத்தி வருகிறார். இந்த சூப்பர் மார்க்கெட்டிற்க்கு கடந்த 2 தினங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வந்து அரிசி, மளிகை பொருட்கள் வாங்குவது போல் பொருட்களின் விலையை கேட்டு, சில வகை பொருட்களை எடுத்து வைக்கக் கூறியுள்ளார். பின்பு கடை உரிமையாளர் மங்கையர்க்கரசி அந்த நபர் கூறிய அனைத்து பொருட்களையும் எடுத்து வைத்துள்ளார்.
பிறகு அந்த நபர் 1400 ரூபாய் விலையில் ஒரு அரிசி சிப்பத்தை எடுத்துக்கொண்டு, உரிமையாளர் மங்கை யர்க்கரசியிடமே ரூ. 2000 பணம் கேட்டுள்ளார். மங்கையர்க்கரசி 2000 ரூபாய் பணத்தையும் எடுத்துக் கொடுத்துள்ளார். இதன் பிறகு அந்த நபர் ஒரு சிப்பம் அரிசி ரூ. 2000 பணம் ஆகியவற்றுடன் தப்பி சென்றுள்ளார். இந்த சம்பவம் நடந்து கொண்டிருந்தபோது கடையின் உரிமையாளர் மங்கையர்க்கரசி தனக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை என கூறியிருக்கிறார்.
வெகுநேரம் கழித்து மங்கை யர்க்கரசிக்கு சுயநினைவு வந்ததாகவும் அதன் பிறகே கடைக்கு வந்த நபர் தன்னை ஏமாற்றி விட்டு சென்றதாக அக்கம்பக்கத்தினர்களிடம் கூறியுள்ளார். இதன்பிறகு மங்கையர்க்கரசி அருகில் உள்ள கீழ்குப்பம் ேபாலீஸ் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார். மங்கையர்க்கரசியின் சூப்பர் மார்க்கெட்டிற்கு அடையாளம் தெரியாத நபர் வந்து போன சம்பவம் அங்குள்ள சிசிடிவி காட்சியில் பதிவான நிலையில் அந்த காட்சிகளை வைத்து போலீசார் குற்றவாளியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.