மழை- முல்லைப்பெரியாறு அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பால் விவசாய பணிகள் மும்முரம்
- கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்தது.
- பெரியாறு 6.4, தேக்கடி 3, உத்தமபாளையம் 1.6, சண்முகாநதி அணை 1.2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
கூடலூர்:
முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. வழக்கமாக ஜூன் மாதத்தில் முதல் போக நெல் சாகுபடிக்காக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்.
அதன்படி இந்த ஆண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பருவமழை தொடங்கியும் போதிய அளவில் மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் உயராமல் இருந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்தது. இதனால் அணையில் இருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் திறப்பு 1200 கன அடியாக உயர்த்தப்பட்டது.
கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டதால் கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் நெல் நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மழை கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில், விவசாய பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 123.60 அடியாக உள்ளது. அணைக்கு 1898 கன அடி நீர் வருகிறது.
வைகை அணையின் நீர் மட்டம் 50.20 அடியாக உள்ளது. 928 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியில் நீடிக்கிறது. அணைக்கு வரும் 30 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 122.08 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 6.4, தேக்கடி 3, உத்தமபாளையம் 1.6, சண்முகாநதி அணை 1.2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.