தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கான திட்டங்கள் அதிகளவில் தீட்டப்படுகிறது
- அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
- ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் தகுதியான குடும்ப தலைவிகள் தேர்வு
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் உள்ள தச்சம்பட்டு கிராமத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்ட தொடக்க விழா நடந்தது.
கலெக்டர் பா.முருகேஷ் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலை வகித்தார். சி.என்.அண்ணாதுரை எம்பி, எம்.எல்.ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி, அம்பேத்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், ஒன்றியக்குழுத் தலைவர் கலைவாணி கலைமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திட்டத்தை தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைக்க எனக்கு அனுமதி அளித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் பெண்களுக்கான திட்டங்கள் அதிக அளவில் தீட்டப்படுகிறது. திமுகவையும், கருணாநிதியையும் உருவாக்கியவர் அண்ணா. உலகிலேயே முதன் முதலில் பெண்களுக்கு வாக்குரிமை அளித்த கட்சி நீதிக்கட்சி.
சொத்தில் பெண்களுக்கு சம பங்கு உண்டு என்ற ஆணை, விதவை பெண்களுக்கு அரசின் சார்பில் தையல் எந்திரம், காவல் துறையில் பெண்கள் பணியாற்ற ஆணை, தேர்தலில் 33 சதவிகித இட ஒதுக்கீடு ஆகியவற்றை வழங்கியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. பெண்களுக்காக கருணாநிதி திட்டங்களை தீட்டினார்.
தற்போதைய முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் 16 திட்டங்களை தீட்டி நடைமுறை படுத்தி வருகிறார்.
அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என்ற புதுமைப்பெண் திட்டம், அரசு பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் ஆகியவற்றை கொடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி இருக்கிறார்.
இது பெண்களுக்கான ஆட்சி. ஆயிரம் ரூபாயை எதிர்பார்த்திருக்கும் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் முன்னாள் எம்பி த.வேணுகோபால், மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், தொழிலாளர் நலன் மேம்பாட்டு அரசு பிரதிநிதி இரா.ஸ்ரீதரன், நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், சீனியர் தடகள சங்க மாவட்ட தலைவர் ப.கார்த்திவேல்மாறன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் ரமணன், முன்னாள் எம்.எல்.ஏ எதிரொலிமணியன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் இல.சரவணன், தொழிலதிபர் பன்னீர்செல்வம், ஒப்பந்ததாரர்கள் துரை வெங்கட், ப்ரியா விஜயரங்கன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் பிரியதர்ஷினி நன்றி கூறினார்.