உள்ளூர் செய்திகள்

சமையல் எண்ணெய் சந்தைப்படுத்துதல் மையம்

Published On 2023-09-05 09:24 GMT   |   Update On 2023-09-05 09:24 GMT
  • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
  • ரூ.3 கோடியே 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது

வேங்கிக்கால்:

திருவண்ணாமலை அடுத்த தெள்ளானந்தல் கிராமத்தில் வேளாண் விற்பனை மற்றும் வணிக வரித்துறை சார்பில் ரூ.3 கோடியே 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சமையல் எண்ணெய் சந்தைப்படுத்துதல் மற்றும் ஊக்குவிப்பு மையத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி குத்து விளக்கேற்றி மையத்தின் செயல்பாடுகளை பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் கு,பிச்சாண்டி பேசியதாவது:-

மணிலா உற்பத்தியில் இந்தியாவிலேயே திருவண்ணாமலை மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது. மணிலாவை எண்ணெய்யாக மாற்றி விற்பனை செய்தால் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும் என்பதற்காக இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு ஒரு மாதம் மட்டுமே மழை பெய்யும் இஸ்ரேல் நாட்டில் மழை நீரை சேமித்து ஆப்பிள் மற்றும் மாதுளை பழங்களை விளைவித்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.

விவசாயிகள் கூட்டாக இணைந்து செயல்பட்டால் அதிக விளைச்சலுடன் அதிக லாபத்தையும் ஈட்டலாம். திருவண்ணாமலையில் டான்காப் என்ற ஆலை ஆரம்பிக்கப்பட்டது. அது பல்வேறு காரணங்களுக்காக மூடப்பட்டது.

தற்போது துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் தெள்ளானந்தால் கிராமத்தில் சமையல் எண்ணெய் சந்தைப்படுத்துல் மற்றும் ஊக்குவிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் இன்று திறக்கப்பட்டுள்ள மையம் குறித்து துண்டு பிரசுரம் அச்சிட்டு விநியோகித்தால் அதற்கு நல்ல பலன் கிடைக்கும்.

இந்த மையத்தால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 20 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுவார்கள். விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தவும் அதற்கு நல்ல விளை கிடைப்பதற்காகவும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளது என இவ்வாறு அவர் பேரினார்.

இதில் கலெக்டர் பா.முருகேஷ், மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ, துரிஞ்சாபுரம் ஒன்றிய குழு தலைவர் தமயந்தி, வேளாண் இணை இயக்குநர் அரக்குமார், துணை இயக்குநர் சிவக்குமார், விற்பனை குழு செயலாளர் சந்திரசேகர், உழவர் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் செல்வராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆராஞ்சி ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News